Sunday, October 21, 2018

ஒடுக்கப்பட்டவர்கள் - தெணியான்
ஈழத்து எழுத்தாளர் திருமிகு தெணியான் அவர்கள் எழுதி பல்வேறு சஞ்சிகைகளில் வெளிவந்த 25 சிறு கதைகள் அடங்கிய தொகுப்பு. 1967 துவக்கம் 2006 வரையிலான காலகட்டத்தில் எழுதப்படவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கதைகளே "ஒடுக்கப்பட்டவர்கள்" தொகுப்பு. நாற்பதாண்டு கால இடைவெளியில் கால மாற்றத்தில் சாதியம், சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி ஆவணமயமாக்கப்பட்ட சிறப்பான தொகுப்பு. ஈழத்தின் ஒடுக்கப்பட்ட மக்களது வாழ்வை பேசுகிறது. யாழ்ப்பாணத்து சாதியவாதிகளின் திமிர்த்தனத்தை ஒவ்வொரு கதையிலும் காண முடிகிறது. புலிகள் காலத்தில் சாதியம் முற்றாக அழிந்து போகாமல் வேறு வடிவில் வலம் வந்த விடையங்களை சில கதைகள் சுட்டுகின்றன. எளிமையான சொல்லாடல்கள், இயல்பான கதை சொல்லும் முறை கதைகளை தொய்வின்றி நகர்த்துகிறது.

"தீண்டத்தகாதவர்கள்" எனும் தொகுப்பினை பாரதி புத்தகாலயம் வெளியீடாக திருமிகு ஈழத்து தலித் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான சுகன் அவர்கள் தொகுத்திருந்த தொகுப்பில் தெணியான் அவர்களின் இரு சிறுகதைகளை வாசித்திருந்தேன். அந்த இரு கதைகளும் மனதில் ஏற்படுத்திய சலனத்தை " ஒடுக்கப்பட்டவர்கள்" தொகுப்பு தெளிவு படுத்தியது என்றால் மிகையாகாது. ஈழத்து தலித் எழுத்தை ஆய்வு செய்ய முனைபவர்களுக்கு இந்த தொகுப்பு ஒரு வரப்பிரசாதம் என்பேன்.

நூல்: ஒடுக்கப்பட்டவர்கள் 
ஆசிரியர்: தெணியான்
மொத்தப் பக்கம்: 200
வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகக் கடை
விலை: ₹400

(குறிப்பு: நூலகம்.ஒர்க் எனும் இணையத்தில் பிடிஎப் வடிவிலும் கிடைக்கிறது)

தோட்டியின் மகன்
மண்வெட்டி, வாளி, மலக்கிடங்கு என வாழும் இசக்கி முத்துவின் மரணம் மகன் சுடலை முத்துவை தோட்டி ஆக்கிவிடுகிறது. ஆனால் சுடலை முத்துவிற்கு தோட்டியாக வாழ்வதில் விருப்பமில்லை. அவனது எண்ணங்கள் வேறுபடுகின்றது. தோட்டிகளின் கூட்டத்திலிருந்து தனித்தே வாழ்கிறான். கடற்கரை பகுதியை சேர்ந்த தூப்புக்காரி வள்ளியை திருமணம் செய்து ஆண்குழந்தை பெற்றெடுக்கிறார்கள். மோகன் என பெயர் சூட்டப்பட்டு தோட்டியின் மகன் என தெரியாதபடி க்கு வளர்க்கின்றனர் சுடலை முத்துவும்-வள்ளியும். காலம் அப்படியேவா இருந்து விடும்? இவர்களின் கனவுகளை நிராசையாக்கி விடுகிறது.

வைசூரி, காலரா போன்ற கொடிய நோய்கள் நிகழ்வுகளின் காலத்தை தெளிவாக புலப்படுத்தும் வேளையில் தோட்டி களின் வாழ்வை நிர்மூலமாக்கி விடுகிறது. தோட்டி களை ஏய்த்து பிழைப்பு நடத்தும் ஓவர்சீயர், அவருக்கு மேலுள்ள முனிசிபல் அதிகாரி என அரச அடக்குமுறையாளர்கள். தோட்டி கள் பள்ளிக்கூடம் சென்ற வரலாற்றையும், மோகனை பள்ளியில் சேர்க்க சுடலைமுத்து செய்த தியாகங்களும், இழப்புகளும் அடுத்த தலைமுறை வாழ்வுக்கான மூலதனம். ஒடுக்கப்படுபவர்களுக்கு கல்வி கிடைத்தால் அது ஒடுக்குவோருக்கு எதிராக சுட்டுவிரல் நீட்டும் என்பதை ஒடுக்கும் வர்க்கம் தெரிந்தே வைத்திருக்கிறது. இன்றைய நீட் கல்விமுறை நவீனப்படுத்தப்பட்ட ஒடுக்குமுறையின் பழைய வடிவம் என்பதறிக.

தோட்டியாக வாழ விரும்பாத சுடலைமுத்து சுடுகாட்டில் காவலாளி வேலைக்கு மாறுகிறான். காலரா நோய் உச்சமடைந்து நேரம் இரவு பகலாக சிறியவர் முதல் பெரியவர் வரை தோட்டிகள் முதல் எசமானர்கள் என பிணங்கள் வந்துகொண்டிருந்தது. மரணங்கள் வாழ்தலின் உன்னதத்தினை உணர்த்துகின்றன. காலரா சுடலை-வள்ளி தம்பதியரையும் காவு வாங்கிவிடுகிறது. மோகன் மண்வெட்டி, வாளி தூக்கி மலக்கிடங்கு செல்கிறான். காலம் வெகு வேகமாக சுழன்று விடுகிறது. மோகன் சுரண்டப்படும் மக்களின் ஒற்றைக் குரலாய் ஓங்கி ஒலிக்கின்றான்.

ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு மாபெரும் பேரணியை நிகழ்த்துகின்றனர். தோழர்களின் சிவப்பு மாலைகளை தோளில் சூடி, சிவப்பு கொடியை கையிலேந்தி பேரணிக்கு தலைமையேற்று மோகன் கம்பீரமாய் முன்னால் வருகிறான். தூத்துக்குடியில் நிகழ்ந்தது போலவே அதிகார வர்க்கம் துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறது. நான்கில் ஒரு பங்காக கூட்டம் குறைகிறது. இப்போதெல்லாம் சம்பளத்தினை எண்ணி வாங்குகிறார்கள். உரிமைகளுக்காக போராடுகிறார்கள். போராட்டம் இல்லையென்றால் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகள் கிடைக்காது என்பதை சம்மட்டியால் அடித்தது போல் சொல்கிறார். மழை கரைத்து செல்லும் அந்த மண் மேட்டில் சிவப்பு மாலை வெளித்தெரிகிறது. இந்த குறியீடு கதையின் முடிவை வாசிப்பவர்கள் உணர்ந்து மன கொந்தளிப்பை உருவாக்கி விடுகிறது. மனித மாண்பினை பறைசாற்றுகிறது. மனம் அலைக்கழிப்புக்கு உள்ளாகிறது. மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

தமிழில் இதுபோன்ற ஒரு புரட்சிகர சிந்தனையை விதைக்கும் சிறந்த நாவல் வாசித்த நினைவு இல்லை. அதியற்புதமான சிவப்பு சிந்தனையை விதைக்கும் எழுத்தை தந்த மலையாள எழுத்தாளர் தகழியாருக்கும், தமிழில் மொழி பெயர்த்த சுந்தர ராமசாமி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.

நூல்: தோட்டியின் மகன்
ஆசிரியர்: தகழி சிவசங்கரன் (தமிழில் சுந்தர ராமசாமி)
மொத்தப் பக்கம்: 176
வெளியீடு: காலச்சுவடு
விலை: ₹175.

Tuesday, October 9, 2018

பின்நவீனத்துவம்-புலம்பல்

சங்க இலக்கிய புரிதலுக்கு பள்ளியில் கோனார் நோட்ஸ் போடாமல் நேரடியாக விளக்கப்படுத்தியிருந்தால் பின்நவீனத்துவ கவிதைகளின் புரிதல் பற்றிய முறைப்பாடுகள் எழாமல் இருக்கும் எனக் கருதுகிறேன். பின்நவீனத்துவம் பற்றி நாம்தான் தேடித் தேடி வாசித்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் நாம் விளக்கவுரைகள் கோரி நிற்போமாயின் சங்கம்-நவீனம்-பின்நவீனம் போன்றவற்றிற்கு இடையிலான இடைவெளிகளின் நிலையை இன்னொரு புதிய இசத்தின் தோற்றுவாய்க்குள் வெற்றிடத்தை உருவாக்கும் துர்ப்பாக்கியத்தினை தமிழ் மொழி ஏற்கும்.

சங்கத்துக்கு பிறகு நம்மிடம் சொல்லும்படியான காலம் இல்லை. மேலைநாடுகளில் இருந்துதான் நாம் இன்னும் ஒவ்வொரு இசங்களையும், கோட்பாடுகளையும் விவாதித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். புதுக்கவிதைகள் புரிந்த அளவிற்கு தற்காலக் கவிதைகள் புரியவில்லை என்னும் கூற்று ஆழமற்ற, மேம்போக்கான வாசிப்புகளும், அனைத்துக்கும் விளக்கம் கோரி நிற்கும் மனமே.

குழுவாத சச்சரவுகள், படைப்பாளர்கள் மீதான தனிநபர் தாக்குதல்களும், ஆரோக்கியமற்ற விமர்சன பார்வைகள், குழப்பங்கள் சிறந்த படைப்புகள் புதியவர்களை சென்றடைவதிலும் தேக்க நிலையை அடைகிறது.

முயற்சித்தால் முடியாது என எதுவுமில்லைதானே?

- சுகன்யா ஞானசூரி
07/10/2018

Monday, September 3, 2018

மூக்குத்திக்காசி-புலியூர் முருகேசன்

ஒற்றை கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்தி பன்னிரண்டு சிறுகதைகளை ஒன்றாக்கி நாவல் என தந்திருப்பதாக தடாலடியாக நான் சொல்வது என்பதைக் காட்டிலும் வாசிக்கும் ஒவ்வொரு மனதிலும் இவ்வெண்ணம் எழவே செய்யும். ஒரு ஆண் படைப்பாளி எப்படி பெண்ணின் அகம், புறம் பற்றி முழுவதும் எழுத இயலாதோ அதற்கு ஒப்பானது மூன்றாம் பாலினத்தவர் பற்றி மற்ற இரு பாலரும் எழுதுவது என்பது. அப்படி ஒரு சவால் மிகுந்த கதாபாத்திரத்தை கொண்டு இந்திய அரசியலையும், அரசு சாரா அமைப்புகளையும், தமிழின் இலக்கியவாதிகளையும் பகடி செய்து, நாவலுக்கான வரையறையை கட்டுடைத்து "மூக்குத்திக்காசி-முப்பாலி" எனும் நூலைத் தந்துள்ளார் தோழர் புலியூர் முருகேசன் அவர்கள். 

ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் பாலினமாக மாறும் ஒருவர் சமூக அவலங்களை அறுத்தெறியும் புரட்சியாளர் அவதாரம் எடுக்கும் கதை. திருநங்கைகள் மீதான சமூகத்தின் பார்வை என்பது மூக்குத்தி காசியின் கடையில் வேலை செய்யும் பெரியவரின் பார்வையை ஒத்தது. இன்றைக்கு அவர்களிலிருந்து எழுத்தாளர்களும், சமூக சேவையாளர்களும், காவல்துறையிலும் என தொடர்ச்சியான முன்னெடுப்புகளினூடு பார்வையை மாற்றி வருகிறார்கள். அதே நேரத்தில் நாவலில் மூக்குத்திக் காசியிடத்தில் மூன்று பத்தாக தன்மைகளின் உணர்வுகளை பிரித்திருப்பது என்பது ஆசிரியரின் மிகுபுனைவு. போபால் விஷவாயுவால் இறந்துபோகும் அக்பர் எனும் குழந்தைக்கு பால் புகட்டுவதில் மூக்குத்திக் காசி பூரண பிறப்பை எய்திருப்பதை குறியீடாக்குகிறார். ஓரின சேர்க்கையை விரும்பும் மாந்தர்களையும் அவர்களின் வெளியுலக மேட்டிமைகளையும் படம் பிடிக்கிறார். "வட மாநிலத்தில் வைத்து இந்துத்துவ வெறியனின் குறியறுத்தல் உச்சம்". எடுத்தாண்டிருக்கும் சில படைப்பாளர்களின் மேற்கோள்கள் அவர்களது நூலுக்கு விமர்சனமாக அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. 

தனித்தனியான தலைப்புகளின் கீழ் முடிவதால் கதையோட்டத்தில் தொய்வும், புள்ளி விவரங்கள் விவரணையால் அயர்ச்சியும் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று. தன் ஊர் மக்களால் அகதியாக்கப்பட்ட ஆசிரியருக்கு அதன் வலியும் வேதனைகளும் அதிகம். அகதி முகாமைக் கடந்து செல்லும் மூக்குத்தி காசியின் பார்வையிலிருந்து ஈழ ஏதிலிகள் தங்கியிருக்கும் தமிழக அகதி முகாம்களின் அவலங்களை புரிந்துகொள்ள செய்கிறார். 

"மூக்குத்தி காசியின் கூடடைதல் போல் நமக்கான கூடடைதலும் சாத்தியமாகும் என நம்புவோம் தோழர்."


Monday, August 13, 2018

மூன்று தலைமுறையின் இரயில் பயணம்தஞ்சை பெரிய கோவில் தரிசனம், சிவகங்கை பூங்காவில் பொழுதுபோக்கு, என மூன்று தலைமுறையின் இரயில் பயணம் கனவை நனவாக்கியிருக்கிறது. அறுபதை நெருங்கும் தாய் தந்தை, முப்பது நடக்கும் உடன்பிறப்பு, மூன்றில் அடிவைக்கும் மகள் என மூன்று தலைமுறையின் கனவுப் பயணமாக அமைந்தது நேற்றைய (12.08.2018) திருச்சி முதல் தஞ்சை வரையான இரயில் பயணம். பெற்றோரின் இதுநாள் வரையான ஆசைகளில் ஒன்றான இரயில் பயணத்தை நேற்றைய தினம் குடும்பமாய் பயணித்து நிறைவேற்றியதில் பெருமகிழ்வு ஒன்று கிடைத்திருக்கிறது. பேத்தியின் விளையாட்டுகளை கண்டு மகிழும் தாத்தா, பாட்டி, அவர்களின் கனவுகளை நிறைவேற்றிய மகிழ்வில் பிள்ளைகள் (மருமகள்கள் உட்பட) என பொன்னான தினமாகவே அமைந்தது. பெற்றோரின் தேவைகளை பூர்த்தி செய்வது பிள்ளைகளின் கடமை என்பதை இந்த பயணம் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கூட்டுக் குடும்ப அமைப்பியல்  சிதைந்து கிடக்கும் இந்த தருணத்தில் இப்படியொரு பயணத்தை நாம் செய்ய வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. முதியோர் இல்லங்களை இல்லாமல் ஆக்க வேண்டும் எனில்  ஒவ்வொரு பிள்ளைகளும் தம் பெற்றோரை (இதில் ஆண் பெண் பிள்ளை பாரபட்சமின்றி) தம்மோடு வைத்து பாதுகாக்க வேண்டும் எனும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். இதற்காக அரசாங்கமா விழிப்புணர்வு தரவேண்டும்? நாம் ஒவ்வொருவரும் நம் வீடுகளிலிருந்து ஆரம்பிப்போம். அவர்கள் கனவுகளை நனவாக்கிக் காட்டுவோம். அடுத்த முறை விமானத்தில் பயணிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். காலமும், பணியும் அந்தக் கனவினையும் நனவாக்கும் என நம்புகிறேன். வாழ்ந்துதான் பார்ப்போமே...வானம் என்ன வானம் தொட்டு விடலாம்.... 

Saturday, May 5, 2018

கீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்

 
 கீரனூர் ஜாகீர்ராஜா படைப்புகளில் பெண்ணியமும் அரசியலும்:

1. மீன்காரத்தெரு
2. மீன்குகைவாசிகள்
3. கருத்த லெப்பை
4. வடக்கேமுறி அலிமா
5. குட்டிச்சுவர் கலைஞன்
 
ஆகிய நான் வாசித்த ஐந்து படைப்புகளை முன்வைத்து பெண்ணியம் சார்ந்தும், அரசியல் சார்ந்தும் எனது அவதானத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
 
சாதியும் மதமும் சாமானிய மக்களுக்கானதில்லை. அது பெரிய மனிதர்களெனும் போர்வைக்குள் உளன்றுகொண்டிருப்பவர்களுக்கு வடிகாலாக, திமிர்த்தனத்தின் வெளிப்பாடாக, மற்றவர்களை அடக்கி ஆழ்வதற்கு, அவர்களுக்கு சேவகம் புரிவதற்கு கருவியாக தேவைப்படுகிறது. 

இந்து, கிறித்துவ மதங்களுக்கு இணையாக இஸ்லாமிய மதத்திலும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் புரையோடிப் போயிருக்கின்றன. மீன்காரத் தெருவின் மனிதர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பங்களாத்தெருவாசிகள் உயர்குடிகளாகவும் வருகிறார்கள். இது மீன்குகைவாசிகளிலும் காணக் கிடைக்கிறது. கருத்த லெப்பை, வடக்கேமுறி அலிமா போன்றவற்றிலும் இந்த ஏற்றத்தாழ்வுகள் காணக்கிடைக்கின்றன. குட்டிச்சுவர் கலைஞன் இவற்றிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு அது இலக்கியத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, லாபிகளை, நக்கலும், நய்யாண்டியுமாக சொல்கிறது. இதில் இலக்கிய அரசியல் நிறையவே காணக்கிடைக்கிறது. அரசியலை எள்ளலோடு இன்னும் தூக்கலாக தந்திருக்கிறார். 

பெண்ணியம்: 
எந்த ஒரு நிகழ்வானாலும் பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள்மீது நிகழ்த்துகின்ற வன்முறைகள், பாலியல் சீண்டல்கள், குடும்பச்சுமைகள் என பெண்களுக்கு நிகழ்த்தப்படும் நெருக்கடிகள் சாதிய, மத வேறுபாடின்றி ஓர்மமாகவே அமைகின்றன. மீன்காரத்தெரு மற்றும் மீன்குகைவாசிகள் படைப்புகளில் வருகின்ற நாயகி ஆமினா பரிதாபத்திற்குரிய பாத்திரமாக தோன்றினாலும் இறுதியில் பக்குவப்பட்டவளாக ஆகிவிடுகையில் பெரு மதிப்பு உருவாகிறது. அதுபோலவே ஆமினாவின் அண்ணியாக வரும் ரஜியா கூட்டுக்குடும்பத்தின் பொறுப்புமிக்க மருமகள். வள்ளிபீவி ஒரு மாறுபட்ட கதாபாத்திரம். கருத்த லெப்பை ருக்கையா மனம் பிறழ்ந்தவனுக்கு மனைவியாகி படும் அவலங்களும், முடமோ குருடோ எதுவானாலும் கணவனைப் பிரியாத மனைவியாக நெஞ்சை நெகிழ்த்துகிறார். வடக்கேமுறி அலிமா வாசிக்கும் நெஞ்சத்தை துயரத்தில் ஆழ்த்திவிடுகிறார். புனைகதையாக எழுதிய கதை தன் அண்ணன் மகளாக பிறக்கும் அலிமாக்கு கதையின் அத்தனை பாடுகளும் பொருந்திப்போவதைக் கண்டு ஹபிபுல்லாவின் மனைவி கணவன் எழுதும் இன்னொரு கதை தன் வயிற்றில் வளரும் குழந்தையின் வாழ்வினையும் தீர்மானிக்குமோ எனும் அச்சம் தாய்மையின் வெளிப்பாடு. சில எழுத்தாளர்கள் இப்படித்தான் சிலர் வாழ்வை முன்னமே கணித்து எழுதிவிடும் சோதிடக்காரர்களைப் போன்றவர்களாகிவிடுகிறார்கள். குட்டிச்சுவர் கலைஞனில் வரும் தாட்சாயணி சந்தேகக் கணவனின் கொடுமைகளை அமைதியாக கழுத்தில் சுருக்கிட்டு முடித்துக்கொள்கிறாள். அந்த அனுபூதி இல்லத்தில் அவள் ஆவியாகக்கூட வரத்தயங்குவாள். அவள் வீட்டின் துளசிச் செடியும், செம்பருத்தம் பூக்களும் வாடிப்போவதன்றி வேறென்ன நிகழ்ந்துவிடப்போகிறது. 

இந்தப் பெண்களுக்கெல்லாம் நேரெதிர் பாத்திரமாக வருகிறார்கள் ரமிஜாவும், அன்பம்மாவும், மும்தாஜும். ரமிஜா பங்களாத் தெருவில் இருக்கும் பெரிய வீடுகளுக்கு மீன்காரத் தெருவின் பெண்களை வேலைக்கு அழைத்துச் செல்வதும், எசமானர்களுக்கு பெண்களை தருவிக்கும் தரகுப் பெண்ணாக வருகிறாள். அன்பம்மாள் எசமானர்களால் சீரழிக்கப்பட்ட பெண்களின் கருவைக் கலைக்கும் தாதியாக வருகிறாள். அன்பம்மாள் ஓர் கிறித்துவப் பெண்மணி என்பதும் அறியமுடிகிறது. மும்தாஜ் நைனாவை பிடிக்காமல் உடல் வேட்கையில் வேறு ஒரு சிறு பையனை நிக்காஹ் செய்வதும், நைனாவை வெறுப்பேற்றும்படியாகவும் வருகின்ற ஒரு திமிர் பிடித்த பெண். 

அரசியல்: 
மீன்காரத்தெரு மற்றும் மீன்குகைவாசிகளில் வரும் காசிம் அன்றைய திராவிடக் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு செல்லும் ஒரு இளந்தாரி. அண்ணாவின் புகைப்படம் ஒரு குறியீடு. காசிமின் மேடைப்பேச்சுகள் அவனது அரசியல் கனவினை எடுத்துச் சொல்கிறது. பொருளாதாரமே அரசியலின் மட்டங்களை நிர்ணயிக்கிறது. ஓதம் வியாதியோடும் குலாம் கடையின் டீ மாஸ்டராக பணிபுரிந்துகொண்டு கட்சியின் மேடைகளில் பேசி கணீர் காசிம் எனப் பெயர்பெற்றாலும் ஒரு வார்டு கவுன்சிலர் பதவியைக் கூட பணமே தீர்மானிக்கிறது. மீன்காரத்தெருவாசிகளுக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமல் போவதை காசிமின் ஏக்கங்கள் வாயிலாக அறியமுடிகிறது. 

ஈழப்பிரச்சினைகள் ஒவ்வொரு நாவலிலும் அங்கங்கே எதிரொலிக்கிறது. அதிலும் குட்டிச்சுவர் கலைஞனில் பிரமாதமாகப் பதிவு செய்கிறார். உண்ணாவிரதப் பந்தலில் திமுக தலைவர் திருமிகு கலைஞர் அவர்கள் சொன்ன "மழை விட்டும் தூறல் விடவில்லை" எனும் அந்த வாக்கியம் எழுத்தாளர் அரளி பூவுடனான நேர்காணலில் வெளிப்படுத்துகிறார். இந்த நேர்காணலில் ஈழதேசியத் தலைவர் திருமிகு பிரபாகரன் அவர்களது மரணத்தையும், இருப்பையும் குறித்தும் குட்டிச்சுவர்க் கலைஞனின் மரணம் மற்றும் இருப்பினூடாக விவரித்துச் செல்கிறார். இன்றைக்கு ஈழத்து இலக்கிய வெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கும், இஸ்லாமியத் தமிழர்களுக்குமிடையில் நடந்துவரும் கருத்து மோதல்கள் ஆரோக்கியமான சூழலாக இல்லை. அதேபோல் இறுதி யுத்தம் முடிந்து ஒரு தசாப்தத்தினை தொடும் இவ்வேளையில் தமிழர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. உலகநாடுகளும் வேடிக்கைதான் பார்க்கின்றன. "கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என மய்யத்தின் ஸ்தாபகர் சொல்வதுபோல் பிரபாகரன் இருந்திருந்தால் நல்லாயிருக்கும் என்றே சொல்ல துவங்கியுள்ளனர் ஒட்டுமொத்த தமிழர்களும்."

இங்குள்ள இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் ஆதியை வசதியாக மறந்துவிட்டு நேரடியாக அரேபியாவில் இருந்து வந்தவர்கள் என்ற மமதையில் திரிவதையும் முத்துகனி பாய் பாத்திரத்தினூடாக பதிவு செய்கிறார். தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியன் என்றால் தீவிரவாதி என பொதுப்புத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது இந்துத்துவவாதிகளின் திட்டமிட்ட செயல். இதுபோலவே இஸ்லாமிய இளைஞர்களிடத்தில் துவேசத்தினை விதைப்பதாகவும் சாடியுள்ளார். முத்துகனி பாய் சொல்வதுபோல் "மதத்தை பக்குவமாக சொல்லித்தர வேண்டும் வெறியூட்டக்கூடாது." இது அனைத்து மதத்தினருக்கும் பொருத்தமானதே. 

ஒவ்வொரு நாவலிலும் எழுத்தாளரின் எழுத்து மெருக்கேறி வருவதை நாம் வாசிக்கும்போது உணர்ந்துகொள்ள இயலும். அதிலும் குட்டிச்சுவர் கலைஞனில் அவரது எழுத்துகள் நர்த்தனமாடியிருக்கின்றன. "எலுத்தாளர் பொம்மை" இருக்குங்களா என சிறுவன் கேட்குமிடம் சிரிப்பின் சரவெடி. நாவலில் இப்படியொரு நகைச்சுவையை வாசிப்பது புதியதொரு முறையாகவே தெரிகிறது. தொடரட்டும் இப்படியான புதிய முயற்சிகள். தமிழ் இலக்கிய வெளியில் இது புதிய பாய்ச்சல்.
 
அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல் எண்: 28,29,30,31&32
 

Sunday, April 22, 2018

பாதுகை-டொமினிக் ஜீவா முன்வைக்கும் தொழிலாளர் வாழ்வின் கதைகள்


டொமினிக் ஜீவா அவர்களது "பாதுகை" சிறுகதை யாழ் நகரத்து தொழிலாளர்களை மாத்திரம் அல்லாது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வாழ்வை பறைசாற்றும் கதைகளாகவே இருக்கின்றன. ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கைப் போராட்டம். அவர்களின் வறுமை அவர்களின் சுய கெளரவத்தினை, அவர்களின் நேர்மையை ஒரு போதும் அசைக்க முடியாமல் தன் தோல்விகளை வறுமை ஒப்புக்கொண்டு விட்டது. பாதுகை சிறுகதை தொகுப்பினூடாக நாம் 1950-60களின் யாழ் மாகாணத்தின் அதை ஒட்டிய கிராமங்களை அதன் நிலைகளை, வளர்ச்சிகளை கதைகளின் ஊடே ஓவியமாக தீட்டியிருப்பதை மனக்கண்முன் கொண்டுவந்து விடுகிறார். எனக்கு 90களின் போர் சிதைத்த நகரங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அதோடு என் அம்மம்மா சொன்ன கதைகளினூடாக அறிந்த நகரங்களை இப்போது பாதுகையில் காண முடிகிறது.

"பாதுகை" ல் வரும் செருப்பு தைக்கும் தொழிலாளி முத்து முகம்மது, "நகரத்தின் நிழல்" லில் வரும் ரிக்ஸா வண்டியோட்டி சின்னட்டி, "தாளக் காவடி" ல் வரும் அரசுப் பேருந்தின் நடத்துனர் (இவர் ஊர் பெயர் பருத்தித்துறை என்பதை சொல்கிறார். ஆனால் அவர் பெயரை சொல்லவில்லை. இது ஏன் என்பது தெரியவில்லை. அது கதாசிரியருக்கு மட்டுமே தெரிந்ததாகவோ, புனைவாகவோ இருக்கலாம்.), "கைவண்டி" ல் வரும் நகரசுத்தித் தொழிலாளி செபமாலை மற்றும் "காகிதக் காடு" கதையில் வரும் நியூ புக் ஹவுஸ் ல் பணிபுரியும் மாலினி போன்றவர்களை இன்றும் நான் வேறு வேறு ரூபத்தில் பார்த்துதான் வருகிறேன். அதிலும் மாலினியின் கதாபாத்திரம் பணியிடத்தில் பெண்களின் பிரச்சினையை பேசுகிறது. நவநாகரீக உடையில் வருபவர்களின் சேட்டைகளும் ஐம்பது ஆண்டுகளாகியும் மாறாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

"குறளி வித்தை" கதையில் பிரசவத்திற்காக மனைவி பூமணியை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வீடு வருகிறார் தம்பிப்பிள்ளை. மனைவி கடுமையாக இருப்பதாக அனுப்பிய செவிலியர்களின் தவறான தந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகும் தம்பிப்பிள்ளை கற்கண்டும், கப்பல் வாழைப்பழமும் வாங்கும் பாக்கியத்தில் அனைத்தையும் மறந்து மனைவியையும் குழந்தையையும் பார்க்க செல்கிறார். கற்கண்டும் கப்பல் வாழைப்பழமும் ஆண் குழந்தை பிறப்பை குறிக்கும் குறியீடு. இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது "சவாரி" கதை. அச்சுவேலி சந்தையில் மாட்டுவண்டி சவாரி செய்யும் சவாரிச் சரவணை எனும் பட்டப்பெயர் பெற்ற சரவண முத்தருக்கு நான்கு ஆண் பிள்ளைகளுக்கு பிறகு ஐந்தாங்கால் பெண் பிள்ளை. முப்பத்தி ஒன்றாம் நாளில் பிள்ளைக்கு கண்டம் இருப்பதாகவும், அப்படி பிள்ளை கண்டத்திலிருந்து தப்பினாலும் அது தகப்பன் உயிரை எடுக்கும் என சித்திவிநாயகம் சாத்திரி சொன்னதை நம்பும் சரவண முத்தருக்கு தெரியாது அது சுருளி சுந்தரம் செய்த தந்திரம் என்பது. மாட்டுச் சவாரியில் வெற்றிபெறுகிறார் சரவண முத்தர். பெண் பிள்ளை வந்த நேரம்தான் இந்த வெற்றியை தந்தது என பெருமைப்படுகிறார்.

"வாய்க்கரிசி" கதை மதம் மாறி காதல் மணம் புரிந்த குடும்பத்தின் வாழ்வைச் சொல்லும் கதை. தேவதாசன் தன் மாமனுக்கு சுடலையில் வாய்க்கரிசி போட முடியாத நிலையை சொல்கிறது. "பாபச்சலுகை" கதை நடேசலிங்கம் எனும் சாதிய திமிரும் அதனால் எழும் விவாதமும் மருத்துவமனையில் திருச்செல்வதுடன் நடைபெறுகிறது. தன் பிள்ளையை கண்ட சாதிகள் படிக்கும் பள்ளியில் சேர்க்காத நடேசலிங்கத்திடம் கூண்டில் பறவையை அடைத்து வைத்திருந்தால் அது பிறகு கூண்டுதான் தன் உலகமென அங்குதான் கிடக்கும், பிறகு ஏன் கண்ட சாதிகளும் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த ஆஸ்பத்திரியில் சேர்கிறீர்கள் என்ற திருச்செல்வத்தின் கேள்வியில் மௌனமாகிறார் நடேசலிங்கம். நடேசலிங்கத்தின் மகளுக்கு பெயர் தெரியாத பெரிய வியாதி. இதுவே பாபச்சலுகை. நீங்கள் சொல்லும் அந்த கண்ட சாதிகள்தான் தங்கள் மொழியை, தங்கள் பாரம்பரியத்தை காவிக்கொண்டு திரிகிறார்கள் என்ற திருச்செல்வத்தின் வார்த்தைகள் சாட்டையாக விளாசுகிறது.

இப்படியாக வாழ்வின் அவலங்களை, மனித வாழ்வின் இருப்பை, கிழிந்து தொங்கும் எல்லாவற்றையும் ஒரு ஊசி, நூல் சில ஆணிகள் கொண்டு புதுப்பித்து தருகிறது பாதுகை.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்: 27
தலைப்பு: பாதுகை (சிறுகதைகள்)
ஆசிரியர்: டொமினிக் ஜீவா
வெளியீடு: தமிழ் புத்தகாலயம் பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 134