Wednesday, February 28, 2018

புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்- ஈழபாரதி


நேற்று முந்தினம் (26/02/2018) எனது சகோதரனின் திருமணத்திற்கு அம்மா மற்றும் அண்ணாவோடு வந்திருந்த ஈழபாரதி தனது நான்காவது நூலான "புலம்பெயர்ந்தோர் கவிதையும்,வலியும்" எனும் நூலினை தந்துவிட்டு சென்றிருந்தார். முழுக்க முழுக்க புலம் பெயர்ந்தவர்களால் எழுதப்பட்ட கவிதைகளை தேடிக் கண்டடைந்த கட்டுரைத் தொகுப்பு.

ஈழபாரதிக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அதுதான் எமக்கான அடையாளமும் கூட. "ஏதிலி" என்பதே அது.

எனக்கு ஈழபாரதியை மாணவப் பருவத்திலிருந்தே அறிமுகம். மாணவர் விடியல் எனும் இதழில் (முகாம்களுக்குள் உள்ள மாணவர்களுக்காக திண்டுக்கல் பெஸ்கி இல்லத்திலிருந்து அருட்தந்தை வின்னி ஜோசப் அவர்களால் கொண்டுவரப்பட்ட இதழ்) நானும் சிறு சிறு கவிதைகள் எழுதிய போது, நிக்சன் எனும் பெயரில் வெளிவந்த இவரது கவிதைகளை வாசித்து வந்தேன். பிறகு கல்லூரி மாணவர்கள் பேரவையின் சந்திப்பின் ஊடாக நேரில் சந்தித்து உரையாடினோம். அதன்பிறகு "வேர்விடும் நம்பிக்கை", "வளரி" போன்ற சிற்றிதழ்கள் எம்மை அடையாளப்படுத்தின.

நான் "அலைகளின் மீதலைதல்" எனும் எனது கவிதை நூலினை வெளியிட்ட ஆண்டில்தான் என நினைக்கிறேன் ஈழபாரதி "சருகுகள்" என்ற முதல் கவிதைத் தொகுப்பினூடாக விருட்சம் பெற துவங்கியிருந்தார். பின்னர் "பனைமரக் காடுகள்" மற்றும் நாட்குறிப்பற்றவனின் இரகசியக் குறிப்புகள்" எனும் கவிதைத் தொகுப்புகள் மூலமாக கவனம்பெறத் துவங்கியிருந்தார். அவரது நான்காவது நூலே இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

 சிறு சிறு கட்டுரைகளாக மொத்தம் பதின்நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான கவிதைகளை இரண்டாக வகைப்படுத்தியுள்ளார்.
1. ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் வலிகளை தாங்களே எழுதுவது
2. புலம் பெயர்ந்தவர்கள் பற்றி மற்றவர்கள் எழுதியது.

"இராமேசுவரத்தில் எல்லோரும்
குளித்துக் கரையேறுகிறார்கள்
நாங்கள் குதித்துக் கரையேறுகின்றோம்"
எனும் கவிஞர் அறிவுமதியின் கவிதையோடு முதல் கட்டுரை நிறைவு பெறுகிறது.

தமிழக முகாம்களில் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கவிதைகளின் வாயிலாக பல கவிஞர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் அல்லாமல் முகாம்களுக்கு வெளியே வெளிப்பதிவில் இருந்தும் சிலர் தங்கள் படைப்புகளின் வாயிலாக புலம் பெயர்ந்தோர் வலிகளை பதிவு செய்துள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து சிலர் அங்குள்ள வலிகளையும், வாழ்வியலையும் பதிவு செய்துள்ளனர்.

ஐக்கூ வடிவிலும் எமது புலம்பெயர் வாழ்வின் வலிகளை பதிவு செய்துள்ளதை தனிக் கட்டுரையாக உருவாக்கியுள்ளார். அதிகாரத்தின் அடக்குமுறைகள், வலிநிறை வாழ்வு என கட்டுரைகள் பேசுகின்றன.

"கரை சேராப் படகுகள்" எனும் கட்டுரையில் எனது கவிதையினையும் இணைத்து எழுதியுள்ளது எனக்குக் கிடைத்திருக்கும் அடையாளமாகவே பார்க்கிறேன். இதே போல உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், வ.ஐ. ச.ஜெயபாலன், சு.சிவா,தொ. பத்தினாதன்,அகரமுதல்வன், தமிழ்நதி, ஈழவாணி, பேனா. மனோகரன், பன்னீர்செல்வம், வேலனையுர் பொன்னன்னா, ஞானக்குமரன், சு.செங்குட்டுவன், தமிழினி போன்றவர்கள் அல்லாமல் இன்னும் விடுபட்டவர்கள் ஏராளம் இருக்கக்கூடும். இவர்களைக் கண்டடைய வேண்டியதும் அவசியமாகும்.

கனடா டொரண்டோ நகரத்தில் மட்டும் 1,70,000 அகதிகளை அதிகளவில் ஏற்றுக்கொண்ட நாடு என நோபல் பரிசு பெற்றிருக்கிறது. அடுத்தபடியாக இந்தியாவில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 110 முகாம்களில் 1,07,435 அகதிகளில் முகாம்களில் வாழ்பவர்கள் சுமார் 60,185, முகாமுக்கு வெளியில் தங்கி வாழ்பவர்கள் 37,000 பேரும், இருப்பதாக 2000ல் வெளியான தேசபக்தன் இதழின் புள்ளிவிபரம் கூட அரசிடம் இல்லாமல் போன கூத்தையும் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். இன்னும் இதில் தெளிவில்லாத நிலையே உள்ளது என்பதும் இந்தியாவின் அகதிகள் கொள்கையின் அவலப் போக்கு வெட்டவெளிச்சம் ஆகிறது. இப்புள்ளி விபரங்களை கட்டுரையில் எடுத்தாண்டு இருப்பது சிறப்பு.

இக்கட்டுரைத் தொகுப்பு இன்னும் ஆழமாகவும், தெளிவாகவும் அடுத்தகட்டத்துக்கு பயணப்படவேண்டிய தொலைவு இன்னும் இருக்கிறது. இவற்றை மனதில் கொண்டு இன்னும் விரிவாக மேன்மைப்படுத்த வேண்டுமாக கேட்டுக்கொள்கிறேன். இது எமது புலம்பெயர் சமூகத்திற்கு கிடைத்திருக்கும் ஒரு வரலாற்று ஆவணம் என்றே நான் கருதுகின்றேன்.

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:7
புலம்பெயர்ந்தோர் கவிதையும்,வலியும்-கட்டுரைகள்
ஆசிரியர்: ஈழபாரதி
மொத்தப் பக்கம்: 72
வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்
விலை: ₹80

Tuesday, February 27, 2018

ஆதிவாசிகள் இனி நடனமாடமாட்டார்கள்



ஹண்ஸ்டா சௌவேந்த்ர சேகர் 2015 ம் ஆண்டுக்கான சாகித்ய அக்காடமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற ஜார்கண்ட் அரசாங்கத்தின் மருத்துவத்துறை அதிகாரி.

 தாதுப்பொருட்கள் நிரம்பிய மண்வளம் கொண்ட மண்ணின் மைந்தர்கள் வாழ்வும், அவர்களின் அவலங்களும், அதிகாரத்தின் கொடுங்கரங்கள் அந்த மக்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளும் அதனால் சிதைந்து போகும் சாந்தால் எனும் ஆதிவாசி மக்களின் விளிம்பு நிலையை கதைகளாகியுள்ளார்.

இந்த தொகுப்பில் மொத்தம் 10 சிறுகதைகள் உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாந்தால் இன மக்களின் வாழ்வை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய ஆவணமாக இத்தொகுப்பு உள்ளது என்றால் மிகையல்ல. 

அசைவம் சாப்பிடுகிறார்கள் மற்றும் ஆதிவாசிகள் இனி நடனமாடமாட்டார்கள் கதைகள் அரசின் செவுளில் அறைவதைப்போல் சொல்லியிருக்கிறார். 

பழங்குடி மக்கள் மீதான கார்ப்பரேட் அரசின் பொருளாதாரச் சுரண்டல்கள், இடப்பெயர்வுகள், வாழ்வாதாரத்துக்கான தேடல், உடலை மூலதனமாக்கும் பெண்கள், பெண்களை காப்பாற்ற இயலாத ஆண்கள் என கதைகளில் மாந்தர்களின் பாத்திரப்படைப்புகள் மனதை கனமாக்குகின்றன. 

தமிழில் அழகாகவும் வாசிப்புத் தடங்கல் இல்லாமலும் மொழிபெயர்ப்பு செய்துள்ள லியோ ஜோசப் அவர்களின் கடின உழைப்பு தெரிகிறது. 

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:6
ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள் - சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்(தமிழில்): லியோ ஜோசப்
மொத்தப் பக்கம்: 192
வெளியீடு: எதிர் வெளியீடு
விலை: ₹180

Wednesday, February 21, 2018

பெருமாள் முருகனின் மூன்று நாவல்கள்

பெருமாள் முருகனின் மூன்று நாவல்கள். 

2017 சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கியது. மாதொரு பாகன் சர்ச்சைகளால் அதை வாசிக்க விரும்பி தேடியபொழுது மூன்று நாவல்களை ஒரே தொகுப்பாக காலச்சுவடு சிறப்புத் தள்ளுபடியில் வெளியிட்டதை அறிந்து வாங்கினேன். இப்போதுதான் வாசிக்கும் சூழல் அமைந்திருக்கிறது. பெருமாள் முருகனை அதுவரையில் நான் வாசித்திருக்கவில்லை. ஆனால் ஒரு எழுத்தாளன் மீது தொடுக்கப்பட்ட அந்த சர்ச்சைதான் அவர் யார் என்பதை அடையாளம் காட்டியது. இங்கு நாம் எழுத்துக்களைக் கொண்டாடும் அளவுக்கு எழுத்தாளர்களை கொண்டாடுவதில்லை. இலக்கியம் என்றால் சங்கப் பாடல்கள் மட்டுமே இலக்கியம் எனும் மன நிலையிலிருந்து நாம் இன்னும் வெளிவரவில்லை. அவர்கள் அன்றைக்கான சமகால பிரச்சினைகளை பாடுபொருளாகினர். இன்றைய சமகாலத்தினை புனைவுகளின் ஊடாக சொல்லிச்செல்வதும் இலக்கியம்தான்.

1.மாதொரு பாகன்: 

பூவரசம் பூவின் மஞ்சள் வண்ணத்தில் துவங்கும் கதை அதன் செந்நிறத்தில் முடிகிறது. காளி எனும் பாத்திரத்தின் மனம் இறுதியில் எடுக்கும் முடிவு மனதை கனக்க வைக்கிறது. பொன்னா எனும் பத்திரம் அன்றைய பெண்களின் நிலைகளை சுமந்து நிற்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் இக்கதை நிகழ்கிறது. வாரிசு வேண்டி கரட்டு மலைக்கு பெருநோம்பி செல்லும் பொன்னா ஓர் அபலையின் குறியீடு. பொன்னா மீது காதலை கொட்டும் காளியால் பொன்னாவின் வயிற்றை ரொப்ப முடியாதது இயலாமை. கரட்டு மலையில் பெருநோம்பி அன்று கடவுளின் பெயரால் வேறு ஒரு ஆணோடு புணர்ந்து குழந்தை பாக்கியம் பெறுவதை, அது கடவுளின் குழந்தை என வளர்ப்பதை சிலர் ஏற்றுக்கொண்டாலும் காளியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவும் கருத இடமுண்டு. தாய்,தந்தை,அண்ணன் மற்றும் மாமியாரின் சம்மதத்தோடு பெருநோம்பியில் கரட்டு மலையில் வேறு ஒரு ஆணுடன் புணரும் பொன்னா கணவன் களியோடு புணருவதாகவே நம்புகிறாள். காளியின் மனம் படும் பாடும், ஏமாற்றமும் அளவுக்கதிகமான குடியும் அவனது இறுதி முடிவை எடுக்கிறது. மாமனாரின் வீட்டில் இருந்து கொண்டுவந்து வைத்த பூவரசு செழிப்புடன் அவனுக்கான முடிவையும் தருகிறது.

2.அர்த்தநாரி: 

தொண்டுப்பட்டியில் செழிப்பாக நிற்கும் அந்த பூவரசின் கிளைகளில் ஒன்றை வெட்டுவதிலிருந்து துவங்குகிறது. பொன்னா வேறு ஆணோடு கூடிய துக்கம் தாளாமல் பூவரசில் தூக்கில் தொங்கும் காளியை காப்பற்றி விடுகிறார்கள். ஒரே வீட்டில் இருந்துகொண்டு பொன்னாவும் காளியும் ஒருவரை ஒருவர் பார்க்காமலும், பேசாமலும் ஒவ்வொரு நாட்களாக கழிகிறது. பொன்னாவின் உடலில் மாற்றங்கள் தெரிகிறது. மாசம் பத்து வந்து குழந்தையும் பிறந்துவிடுகிறது. குழந்தையை ஏறெடுத்தும் பார்க்காமல் செல்லும் காளியின் மனம் மாறும் என நம்புகிறாள் பொன்னா. ஆனால் காளியின் மனமோ மாறவில்லை. மனமுடைந்த பொன்னா விட்டதில் சேலையில் தூக்கு மாட்டச் செல்லும்போது ஆதுரமாக காளியின் கை பற்றுகிறது. சிவன் தன் உடல்பாகத்தில் உமையை ஏற்றுக்கொள்ளும் நிலையை அர்த்தநாரி என்கிறோம். இங்கும் அது பொருந்துகிறது.

3.ஆலவாயன்: 

காளி இறந்துவிட பொன்னா குழந்தையோடு வாழுகிறாள். தொண்டுப்பட்டிக்குள் காளி அரூபமாய் வந்து செல்கிறான். ஒரு ஆண் துணை இல்லாத வீட்டில் எப்படியான இன்னல்கள் அவளை நெருக்குகின்றன என்பதை விபரிக்கிறார். கரட்டுமலையில் பெருநோம்பியன்று கலவி கொண்டவனோடு போய் சேர்ந்து வழலாமா எனும் பெரும் மனப் போராட்டங்கள் பொன்னாவினுள் வதைக்கின்றன. அவன் பெயர் அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது அவனுக்கு அவள் வைத்த பெயராக இருக்கிறது. குழந்தையோடு கொஞ்சிப் பேசும் பொன்னா குழந்தைக்கு பெயர் வைக்க ஆசைப்படுகிறாள். குழந்தையின் காதில் ரகசியமாய் அந்தப் பெயரைச் சொல்கிறாள். அந்தப் பெயர் ஆலவாயன். 

மாதொரு பாகனின் முடிவிலிருந்து இருவேறு நாவல்களை உருவாக்கி பரீச்சார்த்தம் செய்திருக்கிறார். தமிழில் இப்படியான செயல்பாடுகள் அரிதினும் அரிதே. மூன்று நாவல்களையும் ஒரே மூச்சில் படித்தது சிறப்பு. பிசிறு தட்டாத எழுத்து வாசிப்புக்கான வேகத்தை தருகிறது. 

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:5
மாதொரு பாகன், ஆலவாயன், அர்த்தநாரி-நாவல்கள்
ஆசிரியர்: பெருமாள் முருகன்
மொத்தப் பக்கம்: 544
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ₹260


Monday, February 19, 2018

தஞ்சை நாடோடிக் கதைகள்-தஞ்சை பிரகாஷ்

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:4
தஞ்சை நாடோடிக் கதைகள்- சிறுகதை தொகுப்பு
ஆசிரியர்: தொகுப்பு(தஞ்சை பிரகாஷ்)
மொத்தப் பக்கம்: 120
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ₹100
தஞ்சை என்றதும் எனது முதுகலை அறிவியல் படிப்பு நாட்களே(2006-2008)நினைவில் எழுகின்றன. தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு எதிரே இருக்கும் அக்ரஹாரத் தெருவில் ஒரு வீட்டின் மாடியில் உள்ள சிறிய அறையில்தான் நானும் நண்பர்கள் கார்த்திகேயன், மணிகண்டன் போன்றவர்களோடு இருந்தேன். நண்பர்கள் வீடு செல்லும் விடுமுறை நாட்களின் தனிமை பல நேரங்களில் என்னை அச்சுறுத்தும். அவ்வளவு அமைதியான இடம். அந்த அச்சுறுதலில் இருந்து என்னை தற்காத்துக்கொள்ள இரவு பகல் பாராமல் பெரியகோவில், சிவகங்கை பூங்கா, சரசுவதி மஹால், அரண்மனை, மணிமண்டபம், குமரன், ஜூபிடர் திரையரங்கம், நகர்மன்ற நிகழ்வுகள், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் என நடந்தே திரிந்தேன். இப்படியாகத்தான் நான் தஞ்சையை தெரிந்துகொண்டேன்.

தஞ்சை நாடோடிக் கதைகள் என்றதும் பெயருக்காகவே இந்த நூலை வாங்கியிருந்தேன். தஞ்சை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து எழுதியவர்களின் சிறுகதைகளை தேடித் தேடி சேகரம் செய்து தொகுத்துள்ளார் எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் அவர்கள். மொத்தம் 22 சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது. சில கதைகளை எழுதியவர் விபரம் கிடைக்கவில்லை. ஒரு ஊரில் என்று கதை சொல்லும் பாட்டி கதைகளை ஒத்து இருக்கிறது அத்தனை கதைகளும். சிறுவர்களுக்கும் இந்த கதைகளை பரிந்துரை செய்யலாம். அவ்வளவு அற்புதமான நாடோடிக் கதைகள். இந்த கதைகளை எழுதியவர்கள் இன்னும் எழுத்துகிறார்களா எனும் ஆவல் எழுவது இயல்பு.

ஒவ்வொரு கதையிலும் தஞ்சையின் மண் வாசமும், எள்ளலும் கூடவே பயணிக்கிறது. 22 கதைகளும் ஒரே ஆள் எழுதியது போன்ற நேர்த்தி குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற கதைகள் அந்த ஊரின் அத்தனை விழுமியங்களை கால காலத்திற்கும் கடத்திச் செல்லும் ஒரு நினைவுப் பேழை. ஆவணக் குறிப்புகள். நெல்லின் வாசமும் காவிரியின் ஈரமும் நிறைந்த தஞ்சை இன்று மாநகர வெக்கையில் வெந்து தவிக்கிறது.

- சுகன்யா ஞானசூரி.

Sunday, February 18, 2018

உறுபசி-எஸ்.ராமகிருஷ்ணன்

புதுக்கோட்டையில் 2015ல் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர் நிகழ்வில்தான் நான் முதன்முதலாக எஸ்.ராவை சந்தித்தேன். அவரது பேச்சினை கேட்டேன். அந்தப் பேச்சில் வசியப்பட்டுப் போனேன் என்பதே உண்மை. அதுவரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரை வாசித்தாலும் முழுமையாக வாசிக்கவில்லை. அப்படி வாசிக்கப் பிரியப்பட்டு வாங்கியதுதான் உறுபசி எனும் நாவல். 

சம்பத் எனும் நண்பனின் மரணம் அவனது நண்பர்கள் துரை, ராமதுரை, மாரியப்பன் மற்றும் கதைசொல்லி ஆகியோரது மன வெளிகளில் பயணிக்கிறது கதை. எடுத்த எடுப்பிலேயே எவ்வித வர்ணனையும் இன்றி எளிமையாக கதையை துவக்கிவிடுகிறார். இது வாசிப்பாளனுக்கு சலிப்பினை ஏற்படுத்தாது வாசிக்கத் தூண்டுகிறது.

கானல் காடு நோக்கிச் செல்லும் நண்பர்களின் பயணம் சம்பத் எனும் நண்பனின் இறப்பின் வலிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான, மனதை ஆசுவாசப்படுத்துவதற்கான உத்தி. நான் எனும் அந்த கதாபாத்திரம் வாசிக்கும் நீங்களாகக்கூட இருக்கலாம். வாசித்து முடிக்கும்போது எனக்கு அந்த நான் பாத்திரம் நானாகவே தெரிந்தது.

சம்பத் எனும் மனிதன் தான்தோன்றித் தனமாக, மது மாது சகவாசங்களில் ஊறித் திளைத்தவனாக, நிலையற்ற மனம் கொண்டவனாக வாழ்த்திருக்கிறான். அவன் அப்படியாக மாறுவதற்கு அவனது குடும்பமும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறார்கள். கானல்காட்டில் நண்பர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் சம்பத்தின் நினைவுகள் எழுவதைக்கொண்டு கதையை தொய்வின்றி நகர்தியிருக்கிறார். சம்பத் தனக்கான வாழ்வை யாருடைய சமரசத்துக்கும் இடமின்றி சுதந்திரமாக வாழ்த்திருக்கிறான். ஏனெனில் அவன் அவனாகவே இருந்திருக்கிறான்.

கானல்காட்டை விட்டு கீழ் இறங்கும் நண்பர்கள் சமூக வாழ்வில் தாம் பொருந்திக் கொள்ளாமல் போயின் இன்னும் இன்னுமென சம்பத்தின் நினைவுகளால் அலைக்கழிக்கப் படுவோம் எனக் கூறுவதும், மலையை திரும்பிப் பார்க்கையில் அங்குமட்டும் மழை பெய்வதாக முடிகிறது.

தமிழில் இப்படி உளவியல் ரீதியாக தத்துவார்த்த அடிப்படையில் அமைந்த நாவல் என்றால் மிகையல்ல. மரணம் ஏற்படுத்தும் பயமும், வாழ்தலுக்கான கட்டாயமும் உந்தித்தள்ளும் இந்த நவீன காலத்தில் இவர்களைப் போன்ற நண்பர்கள் ஏராளமாய் இருந்து வருகிறார்கள் என்பதே எதார்த்தம்.

#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:3
உறுபசி-நாவல்
ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்
மொத்தப் பக்கம்: 136
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ₹115.
-சுகன்யா ஞானசூரி(NV 104)


Friday, February 16, 2018

ஆதிமுகத்தின் காலப்பிரதி-இரா.பூபாலன்

ஒரு கவிதை வாசிப்பவருக்கு சிறு அதிர்வை உருவாக்கிச் செல்லுமேயானால் அது சிறந்த கவிதையாக வாசிக்கும் மனதுக்கு இருக்கும். ஒரு சிறந்த கவிதை வாசிப்பாளருக்கும் வரிகளுக்குமிடையில் இடைவெளியைக் குறைக்கும் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

இரா.பூபாலனின் "ஆதிமுகத்தின் காலப்பிரதியில்" ஒவ்வொரு கவிதையும் அதிர்வை உருவாக்குகிறது. மனசை பிசைகிறது. இவரது கவிதைகளில் வலி, ஏக்கம், விரக்தி போன்றவைகள் அடிநாதமாக எல்லாக் கவிதைகளிலும் வெளிப்படுகின்றன. இது கவிமனத்தின் வெளிப்பாடா? சமூகத்தின் செயல்பாடுகளா? எனும் கேள்விகள் எழுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது.

இத்தொகுப்பில் தலைப்பில்லாத கவிதைகள் நிறைய விடையங்களை பேசுகின்றன. பெண்கள் மீதும், சிறுவர்கள் மீதும் நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கண்டு கவிஞர் மனம் பதை பதைப்பதும், அவைகளை தட்டிக் கேட்க இயலாமையில் கவிதைகளாக அடையாளப்படுத்தும் சாமானிய மனிதன்தான் தானும் என்பதை இக்கவிதைகளை வாசிக்கையில் உணர முடியும்.
"இருளில் மட்டுமே
திரிந்து கொண்டிருந்த
ஓநாய்க் கூட்டங்கள்
வெளிச்சத்தின் ருசிக்குப்
பழகிவிட்டிருந்தன."

"ராமனை விடவும்
ராவணன் மீது
நல் அபிப்பிராயம்
வந்திருப்பது
உண்மைதான்."

"ஆதிப் பிணத்தின் 
மீதுதான்
புதைத்துக் கொண்டே
இருக்கிறோம்
நம்
ஒவ்வோரு பிணத்தையும்."

"தத்தித் தாவும் சாபம்", "போலச் செய்தல்" போன்ற கவிதைகளில் குழந்தையாக மாறிவிடுகிறார். குழந்தைகளை அதிகம் நேசிக்கிறார்.

வாழைப்பழத்தில் ஊசியைச் செலுத்துவது போல் அரசியல் கவிதைகளையும் ஆர்ப்பாட்டமின்றி எழுதி செல்கிறார். "ஆகாயத் தாமரையினடியில் ஒளியும் குளம்" மற்றும் "விதி" ஆகியவை இதில் அடக்கம். விதி டிஜிட்டல் இந்தியாவின் அலைவரிசையின் வேகத்தை பகடி செய்திருக்கிறது.

"காலாதிகாலக் கூறு" கவிதையில் சிலைவழி பெண்களின் நிலையைக் கூறும் நுட்பம் அசல். இக்கவிதையை வாசித்து முடித்ததும் நள்ளிரவில் கதறும் அச்சிலைகளை நீங்கள் காணக்கூடும். அவற்றின் கதறல் காதுகளை செவிடாக்கும்.

"என் ஆதிமுகத்தின் மேல்
தினமொரு முகத்தைப்
பூசிக்கொள்ள வேண்டியிருக்கிறது
உங்களுக்குத் தோதாக"
உண்மை முகங்களை மறைத்து நாளும்,பொழுதுக்குமாக ஒவ்வொரு முகங்களை மனிதர்கள் அணிந்துகொண்டு திரிவதை கூறுகிறார். இன்றைய எதார்த்தமும் இதுவாகத்தான் இருக்கிறது.

எளிமையான வார்தைகளைக் கொண்டு வலிமிகுந்த கவிதைகளை யாத்துள்ளார். இது கவிஞரின் மூன்றாவது தொகுப்பு.

#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:2
ஆதிமுகத்தின் காலப்பிரதி-கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: இரா.பூபாலன்
மொத்தப் பக்கம்: 95
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
விலை: ₹70.

- சுகன்யா ஞானசூரி (NV 104)

நீலி-மாலதி மைத்ரி

கவிதைகளை உருவாக்குதல் என்பது ஒரு பெருங்கலை. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே கவிதை. சங்க காலத்திற்குப் பிறகு இன்றைய காலத்தில்தான் பெண் கவிகளின் எழுச்சி வீரியம் பெற்றிருக்கிறது. பெண்ணியம், தலித்தியம் என தன் தளங்களில் சிறந்த கவிதையை அடர்த்தியாக எழுதி வரும் புதுச்சேரியைச் சேர்ந்த பெண் கவி தோழர் மாலதி மைத்ரி. இது இவரது மூன்றாவது தொகுப்பு. தனது சமூக செயல்பாடுகளை அன்றாடம் முகநூலில் பதிவு செய்து வருகிறார். பெண்களின் தொகுப்புகளை வெளியிடும் "அணங்கு" பதிப்பகம் இவருடையது ஆகும்.

வார்த்தைகளின் பேரரசி முகமற்று ஒலிக்கும் ஒவ்வொரு இசையையும் தனிமைத் துயரோடு காட்சிப்படுத்தி வார்த்தை ஜாலம் புரிகிறாள்.
"சொற்களின் அரசிகளே
குளிருக்கான கம்பளத்தை
நம் உடல்களால் நெய்வோம்
முகமற்று ஒலிக்கும்
தூரத்து மத்தள ஓசையைக் கேட்டபடி."

வெள்ளை ஏகாதிபத்தியம் இன்னும் நம்மை ஆட்கொண்டு திரிகிறது. அது இத்தேசத்தை இன்னும் இன்னுமென உறிஞ்சுகிறது. Made in USA எனும் கவிதை இதற்கு நல்ல உதாரணம்.
"வெள்ளை மாளிகையின்
மேல்மாடி ஜன்னல் வழியே
வெளி வழிந்து
சுவரோடு உரசி அசைகிறது
சாத்தானின் வால்...."
"அவரவர் தானியத்திலும்
அவரவர் பெயர்
நம் அனைவரின் சடலத்திலும்
Made in USA"

நுகர்பொருள் கலாச்சாரத்தின் சீரழிவுகளும், அது பெண்களின் மீது நிகழ்த்தும் வன்கொடுமைகளும் ஏராளம். அதை நம் வீட்டின் தொலைக்காட்சி வழி ஏற்றுக்கொள்வது தாராளம். அப்படியாகத்தான் "நுகர்பொருள்" எனும் கவிதை பின்னிரவில் பிரியாணிப் போட்டலத்தோடு ஒரு பைத்தியக்காரியை சிதைக்கும் கொடுமையை விவரிக்கிறது.

இவரது கவிதைகளில் நிறைய பைத்தியக்காரிகள் உலா வருகிறார்கள். "தெருப்பாடகி", "ஹராக்கிரி" போன்றவர்கள் நம்மைப் பார்த்து காறி உமிழ்வதுபோல் பேசி செல்கிறார்கள். சாலையோரங்களில் எங்கேனும் நாம் சந்தித்தவர்களாகக்கூட இருக்கலாம். அவர்களுக்கு "புனிதவதி" போல் சிவபதம் அடையும் வித்தை கிட்டியிருக்குமேயானால் இங்கே பைத்தியங்களாக உலா வந்திருக்க மாட்டார்கள். அதனால்தான் அவர்கள் நீலியாக உருமாறி எதையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.
"பேயின் மொழி
விடுதலை
பூமிக்கு வெளியே
நிற்கிறாள்
நீலி".

#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள் 
நூல்:1/ நாள்: 3
நீலி-கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: மாலதி மைத்ரி
மொத்தப் பக்கம்: 72
வெளியீடு: காலச்சுவடு
விலை: ₹75.

- சுகன்யா ஞானசூரி (NV 104)