Tuesday, November 10, 2020

செம்மொழித்தமிழ்


 

செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்

தொல்காப்பியம் முதல் இறையனார் அகப்பொருள் வரையிலான 41 நூல்களின் தொகுப்பு. நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த சங்க இலக்கிய நூல்களில் விளக்கவுரையுடனான சில பழைய நூல்களை சமீபத்தில் வாங்கியிருந்தாலும் மொத்தமாக ஒரே புத்தகமாக கிடைத்ததில் அளவில்லாத மகிழ்ச்சி. விளக்கவுரை இல்லை என்பது சிறு குறையாக இருப்பினும் பதம் பிரித்து பதிப்பித்திருப்பது எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிறது. நேரில் சென்று வாங்க எண்ணியிருந்தேன். ஆனாலும் சூழல் அமையவில்லை. கடைசி நாளில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி அழைத்தால் அழைப்பை எடுக்காதது சற்று பதற்றமாக (பணத்திற்காக அல்ல நூல் கிடைக்குமோ கிடைக்காதோ என்றே) இருந்தது. ஆனால் நூல் கைக்கு வந்ததும்தான் மனம் நிறைவானது. குறைந்த விலையில் நிறைவான தமிழ் நூல் என்றால் மிகையில்லை. பதிப்பித்து பத்தாண்டுகள் கழித்து கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதும் தமிழ் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதற்கு சான்று பகர்கிறது.

- சுகன்யா ஞானசூரி

கைகழுவிய காலம்


இது எப்படி உள்ளதென நீங்கள்தான் சொல்லவேண்டும் நண்பர்களே. படைப்பு குழுமம் நடாத்தும் கவிக்கோவின் பிறந்தநாள் போட்டிக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கவிதை. 


https://padaippu.com/submitted/kaviko2020/116

கைகழுவிய காலத்தின் கவி!

*************

ஒரு மதுக்குவளையைக் கவிழ்த்து வைக்கும் இடைவெளியில் 

காலங்களை அனாயசமாய்ப் புரட்டிப் பார்க்கிறான் கவிஞன். 

கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இழுத்துவந்து 

நிகழ்காலத்தின் துயரக் கோடுகளோடு முடிச்சிடுகிறான். 

மரபணு அடையாள உணரட்டை அணிந்த 

சூப்பர் மனிதர்கள் கடந்த காலங்களுக்கு பயணிக்கிறார்கள்

நோவாக்கள் கட்டிய கலங்களையொத்தவை அவை.

மனிதர்களின் வளர்ச்சிகளோடும் அரசுகளின் போட்டி அதிகாரத்தோடும் 

இணைந்தேயிருக்கிறது நுண்மிகளின் பரிணாம மாற்றம்.

நுகர்வுக் கலாச்சாரம் கொடிய நோய்களையே பரிசளிக்கிறது.

நூற்றாண்டுகளுக்கு இடையிலான தொலைவில்தான் இருக்கின்றன 

அடிமையுழைப்பில் ரேகை தொலைத்தவர்களும் நுண்மிகளால் 

கைகழுவியே ரேகையுதிர்ந்தவர்களும் வாழ்ந்த காலங்கள்.

நுண்மிகளின் பரவுநிலை பொருளாதார மந்தநிலை அகதிகளாகி 

செத்து வீழும் மக்கள் எதுபற்றியும் கவலையின்றி 

நாளாந்தம் உரையாற்றும் பொறுப்பற்ற தலைவர்கள் 

மாற்றம் பெறவில்லை என்றபடிக்கு மனுசங்களின் 

காலவெளிகளில் பயணித்துத் திரும்பும் சூப்பர் மனிதர்கள்

புறக்கதிர்களின் துணைகொண்டு தத்தமது 

கைகளையும் கலங்களையும் தூய்மை செய்கின்றனர் 

நோவாவின் காலத்திற்கும் சூப்பர் நோவாவின் காலத்திற்கும் 

பயணித்த களைப்பில் உறங்கும் கவி 

கைகழுவிய பின்பே ஒரு மிடறைச் செலுத்தினான்.

- சுகன்யா ஞானசூரி.

திருச்சி.

 https://m.facebook.com/story.php?story_fbid=3178778738899259&id=100003014920463

Wednesday, November 4, 2020

புதிய பரிமாணத்தில் எனது கவிதைகள்


இம்மாதம் புதிய பரிமாணம் இணைய இதழில் வெளியாகியுள்ள "நோய்க்காலத்து அகதியின் பாடல்" என்ற எனது 16 கவிதைகளை இந்த இணையச் சுட்டியில் ச்் http://puthiyaparimaanam.in/?p=1288 சென்று வாசிக்கலாம் தோழர்களே. என் கவிதைகள் குறித்து தங்கள் அனுபவங்களை பதிவு செய்யவும் வேண்டுகிறேன். 



Saturday, October 24, 2020

றாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் - என் மனவெளியில்


 

றாம் சந்தோஷின் சொல் வெளித் தவளைகள் 


கவிதையில் அழகியல் குறித்து, அரசியல் கவிதைகள் அழகியலற்ற வறட்டு நிலைகுறித்து, தத்துவார்த்தமும், படிமங்களும், தொன்மங்களும், மிகையுணர்ச்சிகளும், ஒருவித சோக இழையோட்டமும் இன்னபிற என அமைந்தால்தான் தரமான கவிதை என்ற இதுநாள்வரையான அத்தனை எண்ணவோட்டத்தையும், எனக்குண்டாகியிருந்த பீதியையும் சொல் வெளித் தவளைகள் கலைத்துப்போட்டு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது. 


இந்த தரமான, தரமற்ற என்ற பதங்களை உதிர்ப்பவர்களை வைத்தே இந்த கவிதையியலின் கலாச்சார காவலர்கள் யார் என்பதை நாம் இனங்காண முடியும். ஆனால் இவை எவற்றுக்குள்ளும் அடைபடாத புதிய பாணியிலமைந்த அதாவது பின்நவீன கோட்பாட்டில் (இது தோழர். ஜமாலனின் முன்னுரையில் சுட்டப்பட்டுள்ளது.) அமைந்துள்ள சுய பகடித் தன்மையுடன் கூடிய கவிதைகள். சங்க காலம் தொட்டு எங்க காலம் வரை (தோழர். ஜமாலன் கூற்று முன்னுரையில்) எல்லாக் காலத்தையும் சுய எள்ளலோடு எளிய வரிகளில் கவித்துவம் குன்றாமல் (இங்கு நானே உதிர்க்க வேண்டியதாகிவிடுகிறது) மன வெளியெங்கும் தவளைகள் பாய்ச்சலை நிகழ்த்துகின்றன. 


ஒரு தமிழ் ஆய்வு மாணவர் என்ற வகையில் அவரது தமிழ் இலக்கண, இலக்கிய மரபுகள் இந்த புதிய சிந்தனைக்கு கைகொடுத்திருக்கிறது என்பதற்கு அப்பால் சமகாலத்தில் அதன் தேவை கருதி படைப்பாக்கம் ஆக்கியிருக்கும் மனதிற்கு ஆயிரமாயிரம் கைகுலுக்கல்கள் பத்தாது. 


பிரதிக்கு வெளியே ஒன்றுமில்லை என்கிறார் ழாக் தெரிதா. அத்தனை சமாச்சாரங்களையும் இந்த ஒற்றைப் பிரதிக்குள் முயன்றிருக்கிறார். இப்படியான பரிசோதனை முயற்சியான பிரதியுருவாக்கம் தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஒரு அவசியத் தேவை. இவைகள் காலத்திற்கும் நின்று பேசக்கூடியவை. 


பூனைகளை கவிதைக்குள் கொண்டுவரவில்லை எனில் கவிஞர் என அழைக்கமாட்டார்கள் போல. ஆனால் இங்கே யானை, புலி, நாய், பன்றி, மாடு, மான், நரி, வெளவால் என விலங்குகள் கவிதைகளுக்குள் உலவ விட்டுள்ளார். டாக்கிங் டாமாக பூனை உலவுகின்றது. அதேபோல் கம்யூனிஸ்டுகள், திராவிடர்கள், தமிழ்த் தேசியர்களின் போர்வையில் உலவுகின்ற போலிகளின் முகமூடிகளை கிழித்தெறிகிறார். உடல் உறுப்புகளை களவாடும் மருத்துவத் துறையின் அயோக்கியத்தனத்தை சுட்டும் "எனக்கு நலம் சரியில்லை" கவிதையில் நகுலனை கண்டுகொண்டேன். மாட்டரசியல், பணமதிப்பிழப்பு, கோமியக் குடிக்கிகளின் சங்கித்தனம், இலக்கியவாதிகளின் மேட்டிமைத்தனம், கடவுளர்கள் என பலவற்றையும் பகடிகளோடு குறிப்பால் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். சரி எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தினால் பதில்தான் என்ன? எல்லாவற்றையும் தோலுரித்தால் அங்கே ஒன்றுமே மிஞ்சப்போவதில்லையே? (ஆமாம் வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றுமில்லைதான். விலை கண்ணீர் வர வைக்கிறதே. ஆனாலும் பயன்படுத்தாமல் இருக்க முடிகிறதா? ) மனிதம் எனும் அறம் ஒன்றே அதன் பதிலாகிறது. இந்த நூற்றாண்டின் நுகர்வுக் கலாச்சாரத்தில் அதை நாம் தொலைத்துவிட்டோம். அதைக் கண்டடைய இத்தகைய பிரதியாக்கங்களை அடையாளப்படுத்துகிறோம்.


இத்தொகுப்பில் கீறப்பட்ட சித்திரங்கள் சிறப்பான குறியீட்டு தன்மையோடு கவிதைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. புதிய முயற்சிகள் ஒரு கனவு முயற்சி. First impression is the best impression என்பார்கள். தோழர் றாம் சந்தோஷ் இதை மனதிற்கொண்டு சிறப்பாகச் செய்துள்ளார் என்றால் மிகையில்லை. ஏனெனில் பிரபலமாக இருக்கக்கூடிய பலரும் தங்கள் முதல் பிரதிகளை மறைத்தே வைத்திருப்பர். அதுகுறித்து நான் சொல்லத் தேவையில்லைதானே? 


பின்குறிப்பு: இவற்றை நான் எனது கைப்பேசியில் கழிவறையில் அமர்ந்துதான் டைப் செய்தேன். வெஸ்டர்ன் டாய்லெட்டைக் கண்டுபிடித்தவருக்கு ஆயிரம் நன்றிகள். 

- சுகன்யா ஞானசூரி

24/10/2020

வெளியீடு: சொன்மை பதிப்பகம் 

விலை: ₹110

இது முதற்பதிப்பு. இரண்டாம் பதிப்பை எதிர் வெளியீடு கொண்டுவந்துள்ளதாக அறிகிறேன்.

Monday, October 19, 2020

ழாக் தெரிதா - கட்டவிழ்ப்பு

 


"ழாக் தெரிதா" கட்டவிழ்ப்பு எனும் கோட்பாட்டின் தந்தை என்றே அழைக்கலாம். தத்துவம், இலக்கியம் மற்றும் ஓவியம் என எல்லா தளத்திலும் தனது கட்டவிழ்ப்பு எனும் புதுவகைச் செயல்பாட்டின் மூலம் ஐரோப்பியர்களின் கருத்துக்களை நிர்மூலமாக்கியவர் என்றே சொல்லலாம். இந்தக் கட்டவிழ்ப்பின் செயலால் நண்பர் ஒருவருக்கு ஆதரவாக எழுதி கட்டவிழ்ப்பு கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கி இறுதிக்காலத்தில் மெளனிக்கப்பட்டவர். மார்க்சியத்தையும் கட்டவிழ்ப்பு செய்து மார்க்சியர்களின் வெறுப்பைச் சம்பாதித்தார்.  


எம்.ஜி. சுரேஷின் இந்தச் சிறுநூல் அறிமுக வாசிப்பாளர்களுக்கு ஆகச் சிறந்த ஒரு கையேடு என்றே சொல்வேன். எளிமையான எடுத்துக்காட்டுகளோடு குறியியல் குறித்தும் பிராய்டிசம் குறித்தும் விளக்கிச் செல்கிறார். அடையாளம் பதிப்பகத்தின் பின்நவீன சிந்தனையாளர் வரிசை நூல்களில் மற்றவற்றையும் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வம் எழுகிறது. வாய்ப்புள்ளோர் வாசித்துப் பாருங்கள். 


- சுகன்யா ஞானசூரி

19/10/2020.

நன்றி: Markandan Muthusamy ஐயா.

Saturday, September 19, 2020

தற்சார்பு வாழ்க்கையின் முதல்நிலை



 "#தற்சார்பு" வாழ்க்கையின் முதல்நிலை. இன்றைய தினத்தின் உணவுத் தேவையை பூர்த்தி செய்திருக்கிறது எதேச்சையாக ஊன்றிவைத்த விதை. 


தம்பி அடுத்து என்ன அரசியலில்தானே என உங்கள் மைன்ட் வாய்ஸ் கேட்குது. நமக்கு சோறுதான் முக்கியம்.


 #அகதி அரசியல் பேசுதல் வேண்டும்.


- சுகன்யா ஞானசூரி

19/09/2020.





வெள்ளி விழா ஆண்டில்


 வெள்ளி விழா ஆண்டில் 

*********


18.09.1996 மாலை 6.30 மணிக்கு வலைப்பாடு கடற்பகுதியில் இருந்து புறப்பட்டு 19.09.1996 காலை 8 மணிக்கு தனுஷ்கோடி கரையில் இறங்கிய எமக்கு "அகதி" என முத்திரை குத்தப்பட்டு இன்று 25வது ஆண்டில். சாதனையா? வேதனையா? என பட்டிமன்றம் மட்டும் வைக்கவில்லை. இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் இப்படியே வாழ? இந்திய தேசத்திடம் நாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இங்கு எமக்கு குடியுரிமை தருக. இயலவில்லை எனில் வேறு தேசங்களுக்கு அனுப்புக. 


அந்த அலைகள் ஏன் 

இந்தப் பக்கமாய் 

எம்மை ஒதுக்கின?


- சுகன்யா ஞானசூரி

19/09/2020.

Sunday, September 6, 2020

தொட்டால் சிணுங்கி




 #தொட்டால்_சிணுங்கி 

வழக்கமாக பயன்படுத்துகின்ற வழி கொரோனாவினால் அடைபட்டிருந்ததால் மாற்றுவழியில் இன்று வருகையில் கண்டுகொண்டேன். சிறுபிராயத்து உணர்வுகள் மேலெழுந்து நர்த்தனமாடத் துவங்கியது. உடனே மகளை அழைத்துவந்து மகளோடு நானும் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தோம். முதலில் தொட்டதும் சுருங்கியதைக் கண்டு பயந்த மகளோ அந்தச் செடியை வீட்டுக்கு எடுத்துப் போகலாம் எனும் அளவுக்கு வசியமாகிவிட்டார். மன அழுத்தத்தை போக்கி வசியம் செய்யும் மாயக்காரச் செடி என்பது சாலப் பொருத்தம்தான். கான்கிரீட் காடுகளாகிப் போன மாநகரத்தில் இவைகள் காணக்கிடைப்பதே அரிதினும் அரிதான ஒன்று. தரையோடு படரும் மமோசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இச்செடியை மலையாளத்தில் #தொட்டாவாடி என்று அழைப்பார்களாம். #இந்தியில்_எனக்குத்_தெரியாது. 

- சுகன்யா ஞானசூரி

06/09/2020.




Saturday, July 11, 2020

ஆயிரம் கைகள் சேர்ந்து மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை..."

எந்தவொரு இனமும், எந்தவொரு மொழியும் தன் அழிவுகளிலிருந்து சரி தவறுகளை ஆய்ந்து மீளக் கட்டமைக்கவே முயலும். அதுவே அந்த மக்களின் இருப்பினை உறுதிசெய்யும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக, தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கும் முகமாக, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ், தமிழ்த்தேசியம் எனும் உணர்வுகள் ஏற்படாவண்ணம் நாளொரு சர்ச்சைகள்வழி அவரவருக்காக தரப்பட்ட அஜென்டாவை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறார்கள். ஒரு இனம், மொழி தன் மக்களாலே கொச்சைப்படுத்தப்படும் பேரவலம் தமிழ்ச்சமூகத்தில் மட்டுமே. இது தமிழ்ச்சமூகத்தைப் பீடித்திருக்கும் சாபக்கேடு. இது அவரவர் சார்ந்திருக்கும் அமைப்பியலின் பார்ப்பனிய மனோபாவமே இப்படி ஆட்டுவிக்கிறது.


ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு தமிழ்த்தேசியம் குறித்த அவதானமும், கடந்த காலங்களில் ஏற்பட்ட தமிழ்த்தேசியத்தின் தோற்றுவாய்களின் தெளிவும், திராவிட இயக்கத்தின் பிறப்பு, தலித் அரசியலின் வகிபாகம், பொதுவுடைமையாளர்களின் செயல்பாடு, ஆரிய சமாஜ்யங்களின் வரவும் அவர்களூடான பார்ப்பனர்களின் அதிகார வேட்கையில் விளைந்த இந்து தேசியம் எவ்வாறு தமிழ்த்தேசியத்தை காலத்துக்கும் அடக்கியொடுக்கி தன்னை விஸ்தாரமாக்கியது என ஐயா தொ.ப வினால் தொகுக்கப்பட்ட இச்சிறு நூல் பல்வேறு விடையங்களை இன்றைய தலைமுறைக்கு அறியத்தரும் பொக்கிஷம் என்பேன்.

"ஆயிரம் கைகள் சேர்ந்து மறைத்தாலும்
ஆதவன் மறைவதில்லை..."

- சுகன்யா ஞானசூரி
11/07/2020.

நன்றி: படவருடியாக அனுப்பி உதவிய தோழர் செ.சண்முகசுந்தரம் அவர்களுக்கு.


Friday, May 1, 2020

மே மாதம்








ஈழ எழுத்தாளர் தாமரைச் செல்வி அவர்களது ' வீதியெல்லாம் தோரணம்', ' தாகம்' நாவல்கள் மற்றும் 'அழுவதற்கு நேரமில்லை' சிறுகதை தொகுப்பு என ஒரே மூச்சாக இன்று வாசித்து முடித்தேன். மனமோ கனமாக இருக்கிறது. உறக்கம் வர மறுக்கிறது. பழைய நாட்களுக்குள் அழைத்துச் செல்லுகின்றன. மனதை உலுக்கி எடுக்கிறது. புனைவுகளற்ற எதார்த்தமான கதைகள். கிளாலிக் கடலேரியில் அன்றைக்கு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அம்மம்மாவும், அத்தையும் நினைவுகளில் வந்து தொந்தரவு செய்கிறார்கள். இன்றைய தலைமுறைகள் எல்லாவற்றையும் வசதியாக மறந்துவிட எத்தனிக்கிறது. எல்லாவற்றையும் நாம் மறந்துவிடத்தான் முடியுமா? இவற்றை மீள் வாசிப்பு செய்வதனூடாக எமது வரலாற்றின் பக்கங்களில் ஏற்பட்ட வலிகளையும், வேதனைகளையும் அறியமுடியும். எல்லோருடைய அரசியலுக்கும் பகடியாகிப் போகிற துயரங்களை நாம் சுமந்தலைவோம் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டோம். எல்லாவற்றையும் மறந்துதான் ஆக வேண்டும். இல்லையெனில் விசர் பிடித்தாட்டும். ஒரு தசாப்தமாக மே என்பது எமக்கு துயரத்தை வரலாறாக்கிய மாதம். 

- சுகன்யா ஞானசூரி
01/05/2020.

Tuesday, April 28, 2020

முன் '96' பின் (நினைவோடைக் குறிப்புகள்)

முன் '96' பின் 
(நினைவோடைக் குறிப்புகள்)



பகுதி-1

"96" எனும் திரைப்படம் பலருக்கும் ஒரு நினைவினை ஆழ்மனதிலிருந்து கிளறிவிட்டு பல ரைட்டப்புகளை எழுத வைத்திருக்கிறது. சிலரது ரைட்டப் சிரிப்பாக இருந்தது. சிலரது ஒருதலை ராகமாக இருந்தது. 96 ஐ முன்வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரைட்டப் முகநூல், டிவிட்டர் என எழுதியதை வாசித்தபோது எனக்கும் சிந்தையில் ஒரு பொறி தட்டியது. 96 படம் அல்ல அதாவது 1996 எனது வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திருப்புமுனையாக அமைந்த ஆண்டு. ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு புலம்பெயர்ந்த ஆண்டு. அதனால்தான் நான் இந்த 96ஐ 96 க்கு முன் பின் என இரண்டாக பிரித்து எனது நினைவுக் குறிப்புகளை எழுதினால் என்ன என்று தோன்றியது. 

நினைவுக் குறிப்புகள் எழுதுவதற்கு நீ நிறைய அனுபவங்களை பெற்றுவிட்ட வயோதிபனா என என் உள்மனம் என்னை நக்கலாக வினவினாலும் கொரோனாவின் கொடுங்காலத்தில் நாளை என்பது நிச்சயமற்று இருப்பதால் கிடைத்த அனுபவங்களை குறிப்புகளாக தொகுத்து எனது வலையில் ஏற்றி வைக்க முடிவு செய்தேன். 2015 ல் இருந்து வலைப்பதிவில் எழுதத் துவங்கிய நான் இதுவரை 89 பதிவுகளை மட்டுமே பதிவேற்றியிருக்கிறேன். இனிமேல் நானும் புதுமையாக எழுத வேண்டும் எனும் முயற்சியில் இருந்தபோதுதான் இப்படி ஒன்றை நான் எழுதினால் என்ன என்ற கேள்வி முன்வந்து நின்றது. அந்தக் கேள்வியின் செயல்வடிவே இந்த நினைவோடைக் குறிப்புகள். 

நினைவோடைக் குறிப்புகள் எழுதும்போது சில வேண்டாத விடையங்களையும் சொல்லிவிட்டால் அதனால் ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால் என்ன செய்வது என தயங்கி நின்றபோது வள்ளுவனாரின் 

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு'

எனும் இந்தக் குறளே என்னை எழுதத் துணிய வைத்தது. 

தமிழீழத்தின் வன்னிப் பெரும் நிலத்தின் வலைப்பாடு எனும் கடற்கரையிலிருந்து பின்னேரம் ஆறு மணியளவில் புற்பட்டு தமிழ்நாட்டின் தனுஷ்கோடி கடற்கரைக்கு காலையில் எட்டு மணியளவில் (கிட்டத்தட்ட 14 மணித்தியாலங்கள் நாம் இந்துமா சமுத்திரத்தில் பிரயாணித்திருந்தோம். ஏன் இவ்வளவு மணித்தியாலம் ஆனது என்பதை பின்னால் விரிவாக சொல்கிறேன்.) புலம்பெயர்ந்த 96 ல் எனக்கு வயது 12. நாளை தமிழீழம் மலரும் சுதந்திர தேசத்திற்கு நாம் விரைவில் திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையோடு வந்து இங்கேயே கால் நூற்றாண்டைத் தொட்டுவிட்டேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. 

கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல் ஒன்றில் 'கவிதைக்குப் பொய் அழகு' என்ற போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஒரு கவிஞன் இறந்தகாலத்தை நிகழ்காலத்தில் காட்சிப்படுத்தவும், எதிர்காலத்தை நிகழ்காலத்தில் முன்னறிவிப்புச் செய்யும் அதி உன்னதமான படைப்பு மனம் வாய்க்கப் பெற்றவர்கள். அவர்கள் எப்படி பொய் அழகு எனலாம் என என் மனம் குமுறிக் கிடந்த அந்நாளில் எம் உணர்ச்சிப் பாவலன் காசி ஆனந்தன் அவர்களின் 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டில் அடிமை விலங்கு தெறிக்கும்' என்ற கவிதை வரிகள் எம் தேச விடுதலையின் முன் அனுமானத்தை கட்டியம் கூறுவதாக இருப்பதாக நண்பர்களோடு சிலாகிப்பேன். அதேபோல் சுப்ரமணிய பாரதியின் 'சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்' என்ற கவிதைகளையும் அன்றைய நாளில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தபோது எனது முதல் கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையில் தமிழர் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என புதிய ஏட்டினில் பாடல் சமைப்போம் என எழுதினேன். உணர்ச்சியின் வேகத்தில் எழுதப்படுகின்ற பாடல்கள் பொய்த்துப் போனதை 2009 களுக்குப் பிறகு உணர்ந்துகொண்டேன். நம்பிக்கை தகர்ந்துபோன நாட்கள் அவை. உப்புக் கடல் நீரேரிக்குள் மொத்தக் கனவினையும் புதைத்த மே நாளது. இப்போதுகூட சங்கப் புலவன் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளை உச்சரிக்க தகுதியற்றவர்களாக அகதி முகாமுக்குள் அடைபட்டு இருக்கிறோம். கவிதைக்குப் பொய் பேரழகுதான். வாழ்வோ பெருந் துயரம்.

(தொடரும்)

Tuesday, April 7, 2020

அப்பல்லோ

அப்பல்லோ - சுகன்யா ஞானசூரி யின் வாசிப்பிலிருந்து....

அண்டனூர் சுரா மூன்று நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்பு என குறுகிய காலத்திற்குள் பலப் பரிசுகளுக்கும் பாராட்டுக்கும் உரியவராகி வருகிறார். அப்பல்லோ இவரது மூன்றாவது நாவல்.

அப்பல்லோ என்றதும் கிரேக்கத்தின் கடவுளென நம்பப்படும் உண்மையின் கடவுளை சமகாலதினருக்கு நினைவுக்கு வராதபடிக்கு செய்ய சமகால நிகழ்வொன்று சாட்சியம் ஆகிப்போனது. தினம் ஒரு அறிக்கையும், அவலமான கூத்தும் நிகழ்ந்த இடம் அது. இங்கிருந்துதான் அண்டனூர் சுரா தன் கதையை துவக்குகிறார். ஆதி மருத்துவ குடிகளின் அழிவை சொல்ல ஹோமரின் காப்பியங்களின் கதாபாத்திரங்களை நாவலின் கதாபாத்திரங்களாக்கி ராஜா காலத்து கதையில் நம்மையெல்லாம் அழைத்துச் சென்றாலும் பல்வேறு நிகழ்வுகளை, வரலாற்று சம்பவங்களை கதைகளினூடாக வாசிப்பவர்களிடத்து கடத்துகிறார்.

ஆரிய திராவிட யுத்தம் இக்கதையில் பிரதானமாக இருக்கிறது. தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் மந்திர தந்திரங்களை பயன்படுத்தி மன்னனை ஆட்டுவிக்கும் மந்திரவாதிகள் மருத்துவ குடியை வதைத்து அழிக்கின்றனர். வெண்மணி படுகொலையையும், கூடவே ஈழத்தின் இறுதிப் படுகொலையையும் நினைவுபடுத்துகிறது.

பல்வேறு சம்பவங்களை சிறப்பான ராஜா காலத்து கதை வழி சொல்லும் சுராவுக்கு நன்றாக கதை சொல்ல வந்திருக்கிறது. காட்சிகளின் வர்ணனை சிறப்பாக இருக்கிறது. நாட்டார் வழக்குகளின் சொற்றொடர்களையும் நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். அதேவேளையில் மிகு புனைவு வாசிப்பவருக்கு அயர்ச்சியையோ அல்லது சிரிப்பையோ வரவழைக்கும். இந்நாவலிலும் அது போலான வேகத்தடைகள் இருக்கவே செய்கின்றன. கொங்கையும் பிருஷ்டம் மட்டுமே பெண் உடல் இல்லை. பெண் உடல் மீதான மிகு வர்ணனையும், ஆங்கில படப் பாணியில் பாயும் விலங்கைப் போல் அந்த மருத்துவன் காடுமேடெல்லாம் பாய்வதும், யுத்தம் முடிந்து இரண்டு மாதங்களின் பின்னும் ஒருவன் உயிரோடு இருப்பது போன்ற நிகழ்வுகள் சினிமாத்தனமாக இருக்கிறது.

மூன் மன்னனின் சோரியாசிஸ் நோயும், மருத்துவ குடிகள் மயிர் மழிக்கும் குடியாகி போனதன் பின்னுள்ள தந்திரங்களும் சூழ்ச்சிகளும், காதுகள் கால்களில் இருந்தால் அந்த அரசும் மக்களும் என்னாவார்கள்? அதன் பாரதூரம் எத்தகையது என்பதையும் அந்தக் காலே அம்மன்னனுக்கு எமனாய் அமைவதையும், காலை தொழுதவர்கள் ஆட்சிக் கட்டிலுக்கு வந்தால் என்ன ஆகும் என்பதையும், அன்று முதல் இன்று வரை மருத்துவ கனவை சிதைக்க கொண்டுவரும் திட்டங்களும், திருத்தங்களும், நீட்டின் கொடுமைகள் என கதையின் போக்கில் எள்ளலோடு சொல்லிச் செல்கிறார்.

"முக்கோணக் காதல் கதைபோல் இது முக்கோண அரசின் அரசியல் கதை".

அப்லாஸ் எனும் வாரிசின் பெயரின் ஊடாகவே நாம் அப்பல்லோவை கண்டடைகிறோம். இங்கு அப்பல்லோ மருத்துவக் குடில் அல்ல மருத்துவக் குடியின் எச்சம்.

சரித்திரப் புனைவை தொய்வின்றி பல்வேறு முடிச்சுகளை அவிழ்த்து எதார்த்தமாக வாசிப்பதற்கு தங்குதடையின்றி கதை சொல்வதில் கல்கி, சாண்டில்யன், அகிலன், பாலகுமாரன் வரிசையில் அண்டனூர் சுராவும் இடம் பெறுகிறார்.

சுரா இந்த நிலையோடு தேங்கி விடாமல் மென்மேலும் சிறந்த படைப்புகளைத் தர வேண்டும்.

கால்களற்ற மெனிலாஸை அந்த தாழிக்குள் புதைப்பதாக கனவு காணும் சிறுமி சிந்தி போல் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமான அந்த சந்தேகம் தீராமல் இருக்கிறது. உண்மையிலேயே அவரது கால் வெட்டி எடுக்கப்பட்டதா?

ஆசிரியர்: அண்டனூர் சுரா
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
விலை: ₹245

Monday, March 16, 2020

பூமிப்பந்தின் நாஸ்டால்ஜியா மனம்

பூமிப்பந்தின் நாஸ்டால்ஜியா மனம்!
***************
வான்பாதைகள் நடைபாதைகள்
சனம் கூடும் பொதுவிடங்கள்
வெறிச்சோடிக் கிடக்கின்றன.
பொருளாதாரத்தின்
தேவைகளும் தேக்கங்களும்
இடத்திற்கொன்றாய் மாறுபட்டிருக்கிறது.
உற்பத்தியாளர் நுகர்வோர்க்கிடையில்
பெருத்த வெற்றிடம் ஒன்று இருக்கிறதுதானே?
வீசும் காற்றில் விசம் பரவட்டும் என
அறம் பாடிய தமிழ்க்கவியின் கூற்று
எதிரொலிக்கிறது என் செவிப்பறைக்குள்.
கவிகள் ஒரு தீர்க்கதரிசிகள்.
அபரிமிதமான ஆக்கமும் அழிப்பும்
நுண்ணிய ஒவ்வொன்றிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அறிவார்ந்த சமூகத்தின் பெயர் சூட்டல்கள் அச்சுறுத்தலாம்
அச்சமே பெரும் மூலதனம்
அச்சப்படாதீர்கள்....
காலவெள்ளத்தில் அனைத்தும் நீர்த்துப்போகும்.
கரோனாவிற்கு
முன்பும் பல கொள்ளை நோய்களும்
பேரழிவுகளும் வந்தனதான்.
இனியும் வராதென்பதும் நிச்சயமில்லை
உலகத்தின் சமநிலைப் பேணல்
என சமாதானம் கூறிக்கொள்ளும்
அற்ப மனிதர்களோ
ஒன்றை விளங்கிகொள்வதேயில்லை.
நாஸ்டால்ஜியா மனம்
அனைத்துக்கும் பொதுவானதொன்று.
இந்தப் பூமிப்பந்து
பழைய இடத்தில் தன்னை
இருத்திப் பார்க்க எத்தனிக்கிறது.

- சுகன்யா ஞானசூரி
16/03/2020.

Sunday, February 2, 2020

தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்- ஓவியர் புகழேந்தி



2006 ல் முதல் பதிப்பு கண்டு, 2018ல் ஐந்தாம் பதிப்பாகவும் திருத்தப்பட்டும், விரிவுபடுத்தப்பட்டும் வந்திருக்கும் தொகுப்பு. ஒரு ஓவியன் தூரிகைகளால் தற்சமயம் இழந்து போன ஒரு தேசத்தை எழுத்தின்வழி ஆவணப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தில் இருந்து தமிழீழத்திற்குப் பயணப்பட்ட ஓவியர் தான் கண்டதையும் தன்னைக் கண்டதையும் தொகுப்பாக்கித் தந்திருப்பது பொய்மைகளற்ற நேரடிச் சாட்சியம்.

"ப்ராஜெக்ட் பேக்கன்" திட்டத்தின்படி 2009 ல் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ அரசாங்கத்தின் அத்தனை கூறுகளையும் 2004ல் முதன்முதலாகப் பயணப்படும் ஓவியர் புகழேந்தி அவர்கள் மீண்டும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓவியம் பயிற்றுவிக்க செல்வதும் தமிழீழ நிலமெங்கும் ஓவியங்களை காட்சிப்படுத்துவதும், ஓவியங்களை பார்வையிட்ட போராளிகள், பொதுமக்கள், மாணவர்கள் எழுதிய குறிப்புகள் என ஒவ்வொரு ஊர்வாரியாக பதிவு செய்துள்ளார். இவர்களில் யாரும் உயிரோடு இருப்பார்களா? காணாமலாக்கப்பட்டவர்களுக்குள் இருப்பார்களா? என்பதை நினைக்கும்போது மனசு கனதியாகிறது. பெரும்பாலான போராளிகளும், தளபதிகளும், இல்லை என மனம் நம்ப மறுக்கிறது.

1943ல் மா வோசேதுங்கின் சென்சேனைப்படை யேனான் பகுதியையும், 1974ல் எரித்திரியா விடுதலை இயக்கம் அஸ்மாறா எனும் தலைநகரையும் இழந்து பின் மீட்டெடுத்த வரலாறு போலத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் யாழ் மண்ணை இழந்து பின்னர் படிப்படியாக வெற்றிகொண்டு வரும் சந்தர்ப்பத்தில் சமாதானத்தின் பெயரால் வேவு பார்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்டு நந்திக்கடலில் தோற்கடிக்கப்பட்டார்கள். தோற்கடிப்பின் பின்னால் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் மட்டுமல்லாது எமது மக்களின் சாதிய மனோபாவமும், பிறர் பிள்ளைகள் களமாட தம்பிள்ளைகள் காப்பாற்றும் முகமாக மக்கள் மனம் மாறியதன் பின்னணிகளும் முக்கிய பங்காற்றியுள்ளன. நாம் நிலமிழந்து, நாடிழந்து ஏதிலிகளாக இருக்கும் இந்நேரத்தில் தனித்துவமான வரலாறிழந்து போய்விடும் துயரார்ந்த சூழலில்தான் அரசமைப்புகளும் சமூகச் சூழலும் நிறுத்தியிருக்கிறது.

விழிநீரைச் சுண்டிவிடும் விரலாக ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள் தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலில் தமிழீழ அரசாங்கத்தின் அத்தனை துறைகளையும் பற்றி துறைசார்ந்தவர்களோடு நேரடியாக உரையாடி அவற்றைத் தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாகச் சென்று அவற்றின் களநிலவரங்களையும், நிலக்காட்சிகளையும், வளங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார். வரலாற்றுப் புரட்டுகளுக்கு இடமளிக்காதபடி தேதி, மாதம், ஆண்டு விபரங்களோடு பல்வேறு போராட்டங்களையும், நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தியுள்ளார். மணலாறு விஜயனின் "மெளனப் புதைக்கழிக்குள்"  நூலை ஓவியர் வாசிப்பதனூடாகவும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகளை வெளியுலகிற்கு காட்சிப்படுத்துகிறார். பெரும்பாலும் பொதுவெளிக்கு வராத படுகொலைகள் பலவற்றை இந்நூல் வழி அறியத்தருகிறார். நாவலுக்குள்ளும் செல்லாமல், பயணக் கட்டுரைக்குள்ளும் செல்லாமல் புதிய வடிவொன்றில் இந்நூல் வந்துள்ளது.

ஒவ்வொன்றையும் நான் இங்கே விவரித்து எழுதிவிட்டால் அதுவொரு நூலாகிவிடும் அபாயமிருப்பதால் சுருக்கமாக எழுதிவிடுகிறேன். நான் எழுதுவதைக் காட்டிலும் ஒவ்வொருவரும் இந்த நூலை வாசித்தால் மட்டுமே உங்களால் நிதர்சனத்தினை தரிசிக்க முடியும். இப்படியான ஒரு நூல் எம்மிடம் இருக்கிறதா என்ற கேள்விக்கு கேள்வியோடு நிற்காமல் பதிலளிக்கும் முகமாக ஆவணமாக்கி அனைவர் முன்னும் தந்திருக்கிறார்.

எப்போதும் அலைபேசியில் உரையாடும்போது ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள் ஒன்றைச் சொல்லி மனம் வெதும்புவார். எந்த தமிழகம் விடுதலை வேட்கையோடு செயல்பட்ட புலிகளை ஆதரித்ததோ அதே தமிழகத்தில் புலிகளை கொச்சைப்படுத்தி எழுத களம் அமைத்துத் தருகிறார்கள். இது தெரியாமலே பலர் இந்த புதைக்குழிக்குள் வீழ்ந்துகிடக்கின்றனர். ஆயிரம் கைக்கொண்டு தடுத்தாலும் சூரியனை மறைத்திடத்தான் முடியுமா? என்பார். உண்மைதானே? சமீபத்தில் நடந்துமுடிந்த சென்னை புத்தகச் சந்தையில் எதிரும் புதிருமாக எழுதிவந்த ஈழ எழுத்தாளர்கள் ஒன்றாய் நின்றிருந்த காட்சியை காண நேர்ந்தது. இதுவொரு நல்ல முன்னேற்றம்தான். இவர்கள் ஒன்றாகியது கண்டு கிண்டலாகவும், தூற்றியும் எழுதியவர்களையும் காணமுடிந்தது. "நாம் ஒன்றாதல் கண்டு எம் பகைவர் எங்கோ மறைந்தனர்" என்ற கவிஞரின் வரிகளே நினைவிற்கு  வருகிறது.

வெற்றிபெற்றவர்களே வரலாற்றை எழுதுகிறார்கள். அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தோற்கடிக்கப்பட்டவர்களை மேலும் காயப்படுத்துவதாகவே அமைகிறது. தோற்கடிக்கப்பட்டோர் எழுதும் வரலாறுகள் எப்போதும் அனைவருக்குமானதாக அமையும். நாம் நம் வரலாறுகளை மீட்டெடுக்க இதுபோன்ற ஆவணங்கள் இன்றியமையாத ஒன்று. ஈழவரலாற்றில் புலிகளின் தமிழீழ அரசின் வரலாற்றை அறிந்துகொள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய அவசியமான நூல் இதுவென்பேன்.

- சுகன்யா ஞானசூரி
02/02/2020

பதிப்பகம்: தோழமை
விலை: 400.

Monday, January 20, 2020

சிறீலங்காவின் தேசியத் தற்கொலை - பிரமிள்

இதுவொரு தாமதமான வாசிப்புதான். ஆனால் பிரமிளை கவிஞனாக, கறாரான விமர்சகனாக அறிந்திருந்த எனக்கு இந்த நூலை வாசித்த பிறகு சிறந்த சமூக நோக்குள்ள படைப்பாளனாகவும், கட்டுரையாளனாகவும் எனக்குள் அறிமுகமாகியுள்ளார். தமிழ்த்தேசியம், திராவிடம், மார்க்சியம் போன்ற பார்வைகளிலிருந்து இலங்கையின் தமிழ்-சிங்கள இனமுறுகல் எவ்வாறு பெரும் பகையாக மாறியது, அவற்றிற்கு காரணியானவர்கள் யார்? அதில் குளிர்காய்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என 1984 வரையான காலகட்டம் வரை சட்டகப்படுத்தியிருக்கிறார்.

இலங்கையின் பூர்வகுடிகள் யார் என்பதில் துவங்கி வரலாற்று ரீதியாக நிறுவுவதும், இலங்கைத் தமிழர்-மலையகத் தமிழர்-சிங்களவர் வாக்குவங்கிகள், இவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் தோற்றுவிக்கப்பட்டதன் காரண காரியங்களும், விஜயனின் வருகையில் ஆரம்பித்து ஈழ ஆயுதப் போராளிகள் உருவாகிய காலங்களுக்கிடையிலான காலகட்டத்தை சிறிய நூலுக்குள் இரத்தினச் சுருக்கமாக சொல்லியிருக்கிறார்.

1984 க்கு பிறகு நூல் விரிவாக்கம் கண்டதா தெரியவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் வரைமட்டுமல்லாது இன்றும் புத்த பிட்சுகளுக்கு அச்சப்பட்டே சிங்கள ஆட்சியாளர்கள் தமிழின விரோதப் போக்கை கைக்கொள்கின்றனர்.

மதம் மக்களுக்கான அரசியலை சீரழிக்கும் ஒரு லாகிரி.

- சுகன்யா ஞானசூரி
20/01/2020

Sunday, January 19, 2020

துரோகங்களின் சதிராட்டம்

புள்ளிகள் கரைந்தபொழுது - ஆதிலட்சுமி சிவக்குமார்

துரோகங்களின் சதிராட்டம்.
*****************************

நம்பிக்கைத் துரோகங்களால் வீழ்த்தப்படும்போது அது தரும் வாதை வார்த்தைகளில் விவரிக்க இயலாத ஒன்று. 2009ல் எமது தேசம் வீழ்த்தப்பட்டது போது அடைந்த அதே வேதனையும், மனவுளைவும் 2019 முடிவில் எனது தொழிலில் நான் வீழ்த்தப்பட்ட போதும் உணர முடிந்தது. தீ விபத்து ஏற்பட்ட அந்த இரவில் (எனக்கு மகவு பிறந்து ஒரு வயதாக இருக்கும் இரு தினங்களுக்கு முன்னர்) உயிரைக் துச்சமாக நினைத்து நிறுவனத்தைக் காப்பாற்றி எனது தனித்துவத்தை, தரத்தை நிரூபித்தாலும் அந்த தீ எனது உடலில் கொடுத்த எரிச்சலைக் காட்டிலும் நம்பிக்கைத் துரோகத் தீ மிகவும் எரிச்சலாக இருக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் என்கிற பாகுபாடு மட்டும் துரோகமிழைப்பவர்களில் இருப்பதே இல்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. தற்கொலை ஒரு கோழைத்தனம் என நண்பர்களுக்கு அறிவுரை சொன்னாலும் இப்படியான சூழலில் அது எப்படி எழுகிறது என்பதை அறியும் போதுதான் ஊருக்கு மட்டும்தானா உன் உபதேசம் என மனம் அதைத் தவிர்க்கச் செய்தது வாசிப்பு என்பதைக் காட்டிலும் அன்பான ஆதரவான வார்த்தைகள் அவசியம் என்பதை உணர முடிந்தது. அப்படியான அன்போடும், ஆதரவோடும், தன்னம்பிக்கையையும் எனக்குக் கூறிய முகநூல் அன்புகளுக்கும், உள்பெட்டியில் உரையாடிய நட்புகளுக்கும், அலைபேசிய அரசெழிலன் ஐயா, ஓவியர் புகழேந்தி ஐயா போன்றவர்களுக்கும் பேரன்பும் நன்றிகளும். என்ன செய்வது அனைத்தையும் கடந்துதானே செல்ல வேண்டும். இதுவும் கடந்து போகும் என்பது உண்மைதான்.
*****************************

எந்த ஒன்றையும் வாசிக்க இயலாத மனநிலையில் இருந்த என்னிடம் ஆதிலட்சுமி சிவக்குமார் அவர்கள் எழுதிய "புள்ளிகள் கரைந்தபொழுது" நாவலை அனுப்பி இதை வாசிங்க தம்பி உங்கட மனத்துயர் இதன் கீழ் சிறு புள்ளியாகும் என்றார் ஓவியர் புகழேந்தி ஐயா. வாசித்து முடித்த பிறகு இது எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்தேன்.

புள்ளிகள் கரைந்தபொழுது நாவல் 2009 ல் தோற்கடிக்கப்பட்ட ஈழத் தமிழினத்தின் பாடுகளை செல்வராசா எனும் சாமான்ய கதாபாத்திரத்தினூடாக செல்வபுரத்தில் துவங்கி நந்திக்கடலில் மெளனிப்பது வரையான காலவெளிக்குள் நிகழ்ந்த அவலங்களை இரத்தமும் சதையுமாக காட்சிப்படுத்துகிறது.

செல்வராசாவை நம்பி வழிகளில் இணையும் இரண்டு மூன்று குடும்பங்களையும் உள்ளடக்கி ஒவ்வொரு ஊராக இடம்பெயர்வதன் வலிகளையும் வேதனைகளையும் கண்முன்னே காணும் அவலங்களையும் சுமந்துகொண்டு நந்திக்கடலில் இராணுவப் பகுதிக்குள் தன்னை நம்பி வந்தவர்களையும் சிக்க வைத்துவிட்டோமோ எனும் கையறு நிலையில் நிற்கும் செல்வராசா ஒரு குறியீடாகவே எனக்குத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து 1995 ல் வன்னிக்கு இடம்பெயர்ந்த செல்வராசா கிளிநொச்சியிலிருந்து சற்றுத் தொலைவில் கண்டி வீதியில் செல்வபுரத்தில் ஒரு வீட்டை கடன் பட்டு கட்டிமுடித்து வாழ்ந்த நிலையில் மீண்டுமொரு இடப்பெயர்வு மனச்சிதைவுகளை ஏற்படுத்துகிறது. நாவலின் ஆரம்பத்தில் வருகின்ற பூவரச மரத்தின் காட்சிகளும் வர்ணனைகளும் பெருமாள் முருகனின் மாதொருபாகனை நினைவுபடுத்தினாலும் இரண்டும் வேறு வேறு களம்.

விமானங்களின் வகைகளையும், குண்டுகளின் வகைகளையும், வகைதொகை இல்லாமல் அழிக்கப்பட்ட சனங்களையும், சிதறிக்கிடந்த உடலங்கள், அழக்கூட நேரமின்றி சடலங்களை போட்டது போட்டபடியே விட்டுவிட்டு ஓடும் மனிதர்கள், இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்குள் நிலவுகின்ற ஒற்றுமைகள், வேற்றுமைகள், பொருள் இழப்பு, இடப்பற்றாக்குறை, அரசியல் பழிதீர்ப்புகள், சமாதான காலம் ஏற்படுத்திய மனமாற்றம், அரசியல்வாதிகளின் சுகபோக வாழ்வு, காட்டிக்கொடுத்தல், துரோகத்தின் சதிராட்டம் என மனசை கனதியாக்கும்படியாகச் செய்கிறது. இடையிடையே கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாமல் மூடி வைத்துவிட்டு மனதைக் திடப்படுத்திக்கொண்டே வாசிப்பை தொடர முடிந்தது என்றால் மிகையில்லை.

"நான் அழியலாம்; நாங்கள் அழியக்கூடாது" என்ற கூற்றுக்கமைய ஒரு வரலாற்றுச் சம்பவத்துக்குள் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை கூறிச் செல்வதினூடாக அடுத்த தலைமுறைக்கு எமது வாழ்வின் துன்பியல் நிகழ்வுகளை அறியத்தந்து ஆவணமாக்கியிருக்கிறார். இந்நாவலை ஒவ்வொருவரும் தவறாமல் வாசிக்க வேண்டும். ஏனெனில் இதுவொரு நேரடிச் சாட்சியம்.

- சுகன்யா ஞானசூரி
19/01/2020.

ஆசிரியர்: ஆதிலட்சுமி சிவக்குமார்
பதிப்பகம்: தோழமை
விலை: ₹250.