Friday, April 19, 2019

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

தமிழக நண்பர்கள் சிலரது முகநூல் பக்கத்தில் ஈழத் தமிழர்கள் மீதும், ஈழ அகதிகள் மீதும் ஒவ்வாமை இருப்பதைக் காண முடிந்தது. இதை பாசிசவாதிகள் செய்திருந்தால் நாம் கடந்து செல்லலாம். அல்லது சிறு கண்டணத்தையாவது பதிவு செய்யலாம். ஆனால் கருஞ்சட்டைக்காரர்களும், செஞ்சட்டைக்காரர்களும் ஆகிய எம் நண்பர்கள், தோழர்கள் செய்திருப்பதுதான் மனசை வலிக்கச் செய்கிறது.

"அம்மணமாக ஓட விடுவோம் என்பதும்",  "உங்களுக்குத்தான் ஓட்டு உரிமை இல்லைல மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே", உன் எல்லையோடு நீ நின்றுகொள்". என எப்படி உங்களால் சொல்ல முடிகிறது? இப்படியான மனநிலை பாசிச மனநிலை இல்லையா? இதைத்தான் பெரியாரிசமும், கம்யூனிசமும் கற்றுத் தருகிறதா? தேசமற்று அலையும் அகதி தேசியங்களை பேசக்கூடாதா? அவர்களுக்கு அந்த உரிமை இல்லையா? இது தனிநபர் சார்ந்த பிரச்சினை என தோழர்கள் யாரும் சமரசம் செய்வீர்களா?

தொப்புள்க்கொடி உறவுகள் எனச் சொல்வதெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா? அகதிகள் மீதான உங்கள் பார்வை முற்போக்கு முகமூடி அணிந்த பாசிச மனம்தானா?

அகதிகளில் தமிழ்த்தேசியம் பேசுபவர்கள், பெரியாரிசம் பேசுபவர்கள், கம்யூனிசம் பேசுபவர்கள் என பலர் இருக்கிறார்கள். அது அவரவர் புரிதல் சார்ந்தது. அவரவர் சமூக, மனநிலை சார்ந்தது. நாம் நல்லவற்றை புரிய வைக்க முயற்சி செய்யலாமே ஒழிய கட்டாயப்படுத்தக்கூடாது. ஏற்றுக்கொள்ளவில்லை எனில் சகிப்புத் தன்மையோடு கடந்து செல்ல வேண்டும். இதைத்தான் நான் வாசித்த பெரியாரும், அம்பேத்கரும், மார்கஸும் எனக்கு கற்றுக் கொடுத்தார்கள். நீங்கள் எப்படி இவற்றிலிருந்து தவறினீர்கள்?

2009 ன் பேரழிவுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் சிறுபான்மையாக இருக்கும் நாம் தமிழ், தமிழர் எனும் உணர்வோடு, தொப்புள்கொடி எனும் உறவோடு உங்களோடு பெரும்பான்மையாக உணர்ந்தோம். ஆனால் உங்களிலிருந்து இப்படியான வன்மத்தோடும், ஒவ்வாமையோடும் வருபவர்களைக் கண்டு நாங்கள் அச்சப்படுகிறோம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதெல்லாம் வெறும் சொல்லல்ல என்பதை நம்பும் அதேநேரம் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

- சுகன்யா ஞானசூரி
18/04/2019

4 comments:

  1. அரசியல்வியாதிகள்.... எல்லாமே அவரவருக்குக் கிடைக்கும் அரசியல் பலனுக்காக மட்டுமே உழைப்பவர்கள். நாக்கு எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பேசுபவர்கள்.....

    ReplyDelete
  2. உங்களின் வேதனையை உணரமுடிகிறது. தாங்கள் கூறுவோரைப் போல பலரை இப்போது காணமுடிகிறது. அவர்களுக்கெல்லாம் அதுதான் பிழைப்பு.

    ReplyDelete