Thursday, April 5, 2018

உடைந்த குடை-தாக் ஸூல்ஸ்தாத்

உடைந்த குடை

சாம்பல் நிற வானம் கவிந்திருக்கும் நோர்வே நட்டின் ஆஷ்லோ நகரத்தின் ஜாகொப் ஆல்ஷ் வீதியில் வெண்ணிற சட்டை அணிந்து சுருக்கி மடியும் குடையோடு பார்கபோர்க் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் ஐம்பது வயதைக் கடந்த ஆசிரியர் எலியாஸ் ருக்கலா ஹென்ரிக் இப்ஷனின் "காட்டு வாத்து" ( wild duck) நாடகத்தை நடாத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. இங்கு குடை ஒரு குறியீடாக நிற்கிறது.

நோர்வே நாடு அமைதியான மக்களைக் கொண்ட நாடு என்றுதான் நானும் இதுவரையில் நம்பியிருந்தேன். ஆனால் அவர்களுக்குள்ளும் புறவயத் தாக்கங்களால் அகவயத்துள் எழும் வாழ்வின் போராட்டங்களை மெலிதாக இந்நாவல் அடிக்கோடிட்டு காட்டுகிறது.

மார்க்சியத்தின் மீதான ஆய்வுகளில் நாட்டம் கொண்டு தனது ஆய்வுப் பணியை அதில் நிறைவேற்றும் ஜோஹான் கார்னலுசன் ஏவா லிண்டே எனும் பேரழகு பெண்ணை மணம் செய்து காமிலா எனும் பெண் குழந்தையை பெற்றெடுத்து பிற்பாடு விளம்பர மாயங்களால் முதலாளித்துவத்தின் மீது ஈர்க்கப்பட்டு மனைவியையும் குழந்தையையும் நண்பன் எலியாஸ் ருக்கலாவின் பொறுப்பில் விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் நியூயார்க் புறப்பட்டு விடுகிறான்.

பள்ளியில் மாணவர்களின் செயல்பாடுகளால் விரக்தியடையும் எலியாஸ் ருக்கலாவின் ருத்ரதாண்டவம் விரிய மறுக்கும் குடையின் மீது தனது தேக்கிவைத்த அத்தனை கோபத்தினையும் வெளிப்படுத்தும் அந்த நிமிடம், உதவிக்கு வந்த மாணவியின் மீது காட்டும் எரிச்சல் என பள்ளியின் வாசலில் நடக்கும் இந்த கூச்சல் உள்ளேயிருக்கும் சக ஆசிரியர்களுக்கும் கேட்டிருக்குமென நினைப்பதும், குடைக்கம்பிகள் கிழித்து ரத்தம் வடியும் கைகளோடு தெருவில் இறங்கி நடக்கும் எலியாசின் நினைவுகளில்தான் நாவலின் மையம் கவனம் குவிக்கிறது.

ஏவா லிண்டே எனும் அழகு பதுமையின் அகத்தினிலும் பெரும் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜோஹானால் ஏமாற்றப்பட்டு இன்று எலியாஸ் ருக்கலாவோடு அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும், விரும்பும் எதையும் நிறைவேற்றிக் கொள்ள இயலாத கணவரின் ஊதியம், அதன்பொருட்டு எழும் சச்சரவுகள் என ஒரு சாமானிய பெண்ணாக வலம் வருகிறாள். ஏவா லிண்டேவின் இறுதி முடிவு இதுநாள்வரையில் தேக்கிவைத்தவற்றின் வெளிப்பாடாகவே அமைகிறது.

ஆண்களின் அகவுணர்ச்சி, பெண்களின் அகவுணர்ச்சி என இரண்டும் என்றைக்குமே இணையாத இரயில் தண்டவாளம் போலவே பயணிக்கிறது.

"ஸூல்ஸ்தாத் சரியலிச எழுத்தாளர். இவர் எழுதுவதுதான் தீவிர இலக்கியம்" என முரகாமி கூற்று நாவலை முடித்தபிறகு உணர முடிகிறது. ஜி.குப்புசாமியின் தமிழ் மொழிபெயர்ப்பு வாசிப்புக்கு தடங்கலின்றி கொண்டுசெல்கிறது. தமிழிலும் ஒரு மாபெரும் எழுத்தாளர் இதைப்போல எழுத்தினை தந்திருப்பதாக ஜி.குப்புசாமி தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவரையும் நான் வாசித்தாகவேண்டிய ஆவலை என்னுள் விதைத்துவிட்டார். இப்படித்தான் ஒவ்வொரு புத்தகமும் இன்னொன்றினை தேட வைப்பதாக அமைய வேண்டும். வாய்ப்பிருந்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:17
தலைப்பு: உடைந்த குடை
ஆசிரியர்: தாக் ஸூல்ஸ்தாத் (தமிழில்: ஜி. குப்புசாமி)
வெளியீடு: காலச்சுவடு
மொத்தப் பக்கம்: 128
விலை: ₹140

6 comments:

  1. உடைந்த குடை என்ற கதைய படிக்க தூண்டும் வித்த்தில் சுருக்கமான வரிகளில் , மிக அழகாக எழுதப்பட்டிருக்கு...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையில் மகிழ்கிறேன். அன்பும் நன்றிகளும்...

      Delete
  2. நல்லதொரு நூல் அறிமுகம். நன்றி.

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம்.நன்றி. ஒரேயொரு திருத்தம். ஆரம்பத்தில் இப்ஸனின் நாடகம் ஆங்கிலத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது Wild Duck.

    ReplyDelete
  4. திருத்திக் கொள்கிறேன் அய்யா

    ReplyDelete