Tuesday, April 10, 2018

மஞ்சு-எம்.டி.வாசுதேவன் நாயர்


சுற்றுலா நகரங்கள் எப்போதும் மகிழ்ச்சிக்குரியது அல்ல. சீசனுக்கு சீசன் நாம் சுற்றுலா செல்லும் நகரங்களில் வாழும் மனிதர்களைப் பற்றி என்றாவது சிந்தித்து பார்திருப்போமா? அம்மனிதர்களின் சுக, துக்கம் பற்றி நினைத்துப் பார்திருப்போமா? இல்லை என்றே பெரும்பான்மையோர் சொல்லக்கூடும். நாம் மனிதத்தை நேசிப்பவர்களாக மாறும் கணத்தில் கேள்விக்கான பதில் கிடைக்கக்கூடும். "மஞ்சு" இந்தக் கேள்விகளை எனக்குள் எழுப்பிவிட்டாள்.

"மஞ்சு" மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்களது நெடுங்கதை அல்லது குறுநாவல் என்றே சொல்லலாம். தமிழ், மலையாளம் என இருமொழிப் புலமை பெற்ற ரீனா ஷாலினி அவர்களது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் மூடுபனி. கேரளத்தின் பேரழகை மலைகளை, சாம்பல் பூத்த வானத்தை, பஞ்சுத் துண்டம் போன்ற பறக்கும் வெண் பனித் திவலைகளை, மழையை, அந்திவானக் கருக்கலை, இரவுக் குளிரை இப்படியாக பலவற்றையும் சுற்றிக்காட்டிவிட்டு பெரும் எதிர்பார்ப்பின் மனங்களின் வலிகளோடு திரும்ப விடுகிறார்.

விமலா டீச்சரும், படகோட்டி புத்துவும் இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திரும்பவும் வராமல் போகமாட்டார்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர். தாயின் பிறழ் உறவால் தடுமாறும் மகள், சுற்றங்களை விட்டுவிட்டு விடுதியில் வாழும் விமலா டீச்சர் சுதீர் மிஸ்ரா எனும் வட இந்தியக் காதலனுக்காக ஒன்பது ஆண்டுகளாக காத்திருக்கிறார். புத்து கதையோ வேறானது. அவன் வெள்ளைக்கார தந்தைக்காக காத்திருக்கிறான். இவர்களைப் போன்று இன்னும் தனிமையில் உரையாடிக்கொண்டு காத்திருக்கும் மனிதர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள்.

லங்ஸ் கேன்சரால் பாதிக்கப் பட்டிருக்கும் சர்தார்ஜி விமலா டீச்சரிடத்தில் இன்னொரு காதிருப்பை உருவாக்கிச் செல்கிறார். மரணத்தின் வாசலை விஸ்தாரமாய் காட்டும் சர்தார்ஜி உயிரோடு இருக்கப் போவதோ நான்கு மாதங்கள்தான். இங்கு சர்தார்ஜி ஒரு குறியீடாகவே எனக்கு தோன்றுகிறது.

மஞ்சுப்பனி நம்மையும் ஏதோவொரு கணத்தில் தழுவிச் சென்றிருக்கக் கூடும். தனிமையின் பேச்சும், காத்திருத்தலின் வலியும் மிகக்கொடியது. சீசனுக்கு வந்த பறவைகள் பறந்து சென்றபிறகு அந்த சூன்யத்தின் வெளியில் பேரமைதி காத்திருக்கிறது. அடுத்த சீசனுக்கு வராமல் போய்விடுவார்களா என்ன?

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:20
தலைப்பு: மஞ்சு
ஆசிரியர்: எம்.டி.வாசுதேவன் நாயர் (தமிழில்: ரீனா ஷாலினி)
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
மொத்தப் பக்கம்: 96
விலை: ₹100

4 comments:

  1. மஞ்சு என்ற நாவலை குறுகிய பிரசினால் (brush)அழகாக வரஞ்சிருக்குது.வாழ்த்துக்கள். எம். டி.வாசுதேவன் நாயர் தனித்துவமான திறமை கொண்ட எழுத்தாளர்.மலையாளம் எனக்கு தாய்மொழியென்பதால் வாசிக்கபோது சந்தோசமாக இருந்த்து...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எம்.டி.வாசுதேவன் நாயரின் நெடுங்கதை அல்லது குறுநாவலான "மஞ்சு" பற்றிய மிகச் சுருக்கமான நூலறிமுகம் அருமை. படிக்கவேண்டிய நூல்களுள் ஒன்று என்பதைக் குறித்துக் கொண்டேன்.

    ReplyDelete