Friday, March 2, 2018

பொன்னியின் செல்வன்-கல்கி

பொன்னியின் செல்வனை வாசிக்காதவர்கள் இருப்பார்களா என்றால் சந்தேகம்தான். ஏனெனில் ஒவ்வொரு சென்னை புத்தகச் சந்தையிலும் இன்றுவரை அதிகம் விற்பனையாகும் நூல்களில் பொன்னியின் செல்வனும் ஓன்று. கல்கி அவர்களது சிறப்பான நடைச் சித்திரம் இந்த நூலின் பக்கம் பல வாசகர்களை இழுத்துள்ளது என்பேன். உண்மை எது? புனைவு எது? என பிரித்தறிய முடியாதபடிக்கு கதைகளை தொய்வின்றி எழுதியிருக்கிறார். வரலாற்றுக் குறிப்புகள், கள ஆய்வுகளைக் கொண்டு மூன்றரை ஆண்டுகாலம் தொடராக எழுதியிருக்கிறார். அந்த மூன்றரை ஆண்டுகாலமும் தொடர்ச்சியாக காத்திருந்து வாசித்த அன்றைய வாசிப்பாளர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். பொன்னியின் செல்வன் பற்றி பிறர் பேசக் கேட்டு பெரும் ஆவலோடு வாசிக்க அலைந்துகொண்டிருந்தேன் என்று சொன்னாலும் தப்பில்லை. தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டை ஒட்டி எல்.கே.எம் பப்ளிகேசன் ஐந்து பாகங்களும் அடங்கிய தொகுப்பொன்றை சலுகை விலையில் அறிவித்திருந்தது. சங்கர் படத்தைப் போன்ற பிரம்மாண்டத்தினை இந்த நாவலை வாசித்து முடித்ததும் உணர்ந்தேன்.

பிற்காலச் சோழர்களில் குறிப்பாக அருள் மொழி வர்மன் எனும் இராச இராச சோழனை கதை நாயகனாக கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்று சரித்திரமிக்க நாவல் இது. வல்லவராயன் வந்தியதேவனும், நந்தினியும் என் மனதை பாதித்த கதாபாத்திரங்கள். இவர்கள் இருவரும்தான் மொத்த கதைக்கான அச்சாணி. இவர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தக் கதைகள் சுவாரசியம் அற்றுப் போயிருக்கும். சோழ சாம்ராச்சியத்தின் பலம், பலவீனம், அன்றைய காலகட்டத்தில் இருந்த கிராமங்கள், நகரங்கள், ஓடிய ஆறு, ஆர்ப்பரிக்கும் கடல், வனிகத் தொடர்புகள், கலை கலாச்சாரம் போன்றவற்றை ஆவணமாக்கியிருக்கிறது.

நாளைய தலைமுறைக்கும் இந்நூல் போர் கலையோடு இன்ன பிறவற்றையும் கடத்திச் செல்லும் ஒரு முக்கிய பெட்டகமாக இருக்கும். இது தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்திருக்கும் முக்கியமான தகவல் களஞ்சியம். இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றின் சாட்சியம். தமிழர்களின் சிறப்பான கட்டிடக்கலைக்கு சான்று.

பொன்னியின் செல்வனைப் போன்று இன்னும் பல அரசர்களின், அரசிகளின் வாழ்க்கை முறைகளை, அகம், புறம் போன்றவற்றை எவ்வித பக்கச் சார்புகளுமின்றி நடுநிலையோடு எழுத வேண்டும். சோழப் பேரரசுகளை மட்டுமல்லாது சேர, பாண்டிய பேரரசுகளையும் நாம் ஆவணப்படுத்த வேண்டும்.

அடையாள எண்: NV 104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:8
தலைப்பு: பொன்னியின் செல்வன்-சரித்திர நாவல்
ஆசிரியர்: அமரர் கல்கி
மொத்தப் பக்கம்: 856
வெளியீடு: எல்.கே.எம் பப்ளிகேசன்
விலை: ₹290

2 comments:

 1. என்னிடமும் உண்டு. எத்தனை முறை படித்திருப்பேன் என்ற கணக்கில்லை. இப்போது உங்கள் பதிவு பார்த்ததும் மீண்டும் படிக்க எண்ணம்.

  தொடரட்டும் வாசிப்பு.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதானுங்க. இது எனது இரண்டாவது வாசிப்பு.

   Delete