Monday, July 29, 2019

கடவுளின் முகம்?

நடுநிசி தாண்டிய மாநகரத்தின் சாலையில்
நடந்துகொண்டிருக்கிறேன்.
இரண்டாம் காட்சி முடிந்த திரையரங்கென
சாலை வெறிச்சோடிக் கிடக்கிறது.

இயலாதவனின் குறியெழுப்பத்தினதாக
இருளைப் போக்கும் முயற்சியில் தோல்வியுற்று
மின்னும் விளக்கின்மீது காற்று
தூசிகள்கொண்டு தழுவிச் செல்கிறது.

பெயர்தெரியாப் பூச்சிகளின் சப்தத்தில்
கானகத்தின் படிமம் வந்து செல்கிறது.

நடைபாதைகளில் உறங்கும் இத்தேசத்தின் கடவுள்களை
நாளொரு அறிவிப்பின் பெயரால் இல்லாதழிக்க
சைத்தான்கள் பல்வேறு அவதாரங்களில் அரிதாரமிடுகிறது.

யாசகப் பாத்திரங்கள் சுத்தமாயிருக்கிறது
கடவுள் கருணை காட்டுவதேயில்லையென
விசனத்தோடு உறங்காமல் புரண்டுகொள்கிறது பசித்த வயிறு.

கடவுளின்மீது மோகித்திருக்கும் கலாச்சாரக் காவலர்களுக்கு
சைத்தான்கள் பரிசளித்திருக்கும் சொற்கள்
பல்லிளித்துக்கொண்டிருக்கின்றன சுவர்கள்தோறும்.

கருவறை புழுக்கம் தாளாமல்
தூமைத்துணியை மாற்றிவர
ஆலயத்திலிருந்து வெளியேறிய கடவுள்
சைத்தானால் வழிமறிக்கப்பட்ட அந்த முடக்கில்
அவசர ஊர்தி யாரையோ சுமக்கத் துவங்கியது.
இரவு என்பது உறங்குவதற்கில்லை என்ற
யவனிகாவின் கவிதைகளோடு உறங்கிப்போனவன்
விரித்த காலை செய்தித்தாளில்
வன்புணர்ந்து கொல்லப்பட்டவளின் முகம்
நேற்றைய இரவில் பார்த்த கடவுளுடையதாயிருந்தது.

- சுகன்யா ஞானசூரி
28/07/2019

4 comments: