Monday, March 26, 2018

ஃபாரென்ஹீட் 451



நீரின் கொதிநிலை, உறைநிலை பற்றி நமக்கு தெரிந்ததுதான். ஆனால் இது தாள்களின் எரிநிலை பற்றிய நாவல். விஞ்ஞான ரீதியிலான புனைவிலக்கிய வகையைச் சேர்ந்தது. வாசிக்கும்போது கவிதையா உரைநடையா எனும் கேள்வி எழுவது தவிர்க்க இயலாத ஒன்று. அவ்வளவு நேர்த்தியாக செதுக்கியுள்ளார் 

ஒரு பெயரில்லாத ஊரில் அல்லது நகரத்தில் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் கை மோண்டாக் கதையின் நாயகன். இங்கே தீயை அணைப்பதற்கு பதிலாக சிந்தனைகளை தூண்டும், மதக் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும் நூல்களை, தடை செய்யப்பட்ட புத்தகங்களை தேடித்தேடி மிகவும் விரும்பி ரசித்து எரிக்கும் தீயணைப்பு இல்லை தீமூட்டும் ஊழியானக வருகிறான். மோண்டாக்கின் மனைவியாக மில்லி எனும் மில்ட்ரெட் சுவர்த் தொலைக்காட்சிகளுக்குள் கேளிக்கை விரும்பியாக வருகிறாள்.

க்ளாரி மெக்லானான் எனும் சிறுமியின் நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்களா? போன்ற கேள்விகளிலிருந்து கொஞ்சம் தன்னை கேள்விக்குள்ளாக்கும் கதையின் நாயகன் ஒரு பெண்ணை நூல்களோடு தீயிட்டு எரிக்கும் சம்பவத்திற்கு (அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கிய எழுத்தாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இந்த இடத்தில் என் நினைவில் எழுகிறது) பிறகு நூல்களின் மீதான பற்றுதல் பற்றிப் படரச் செய்கிறது அங்கிருந்து களவாய் எடுத்துவந்த புத்தகம்.

கேப்டன் பியாட்டி அதிகாரத்தின் கொடுங்கரங்கள். பியாட்டியின் எந்திர நாய் மிகவும் பொல்லாதது. கேளிக்கைகளில் மக்களை காலம் களிக்கச் செய்யும் தோரணை, மக்களுக்கு தொலைக்காட்சி மீது (இங்கு 2009 ல் ஈழத்தின் இறுதி யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தபோது மானாட மயிலாட நிகழ்ச்சிகளுக்குள் மக்களை கட்டி வைத்தது நினைவில் எழுகிறது) கவனக் குவிப்பைச் செய்யும் அதிகாரத்தின் மொத்த உருவம் பியாட்டி.

நூல்கள் மீதான ஈர்ப்பு, ஃபேபர் போன்றவர்களுடனான சந்திப்பு, உரையாடல் எல்லாம் கதையின் நாயகனின் வீட்டை எரிக்கும் பொறுப்பை பியாட்டி கொடுக்கும் தருணங்களில் அரசுக்கு, அதிகாரத்துக்கு எதிரானவனாக மாறுகிறான். பிறகு நதியின் போக்கில் சென்று காடுகளுக்குள் அறிவுசார் பெருமக்களோடு வாழ்தல், அந்த அறிவுசார் மக்களும் முன்னர் அரசால் துரத்தப்பட்டவர்களே.

கற்பனை என்பது எல்லையற்றது. ஆனால் அது மனித சமூகத்தை சிந்திக்க விடாமல் செய்யும் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளும்(தொலைக்காட்சி), கேளிக்கைகளும் மனித சமூகத்தை அழித்துவிடும் எனும் தத்துவத்தை திறம்பட செய்திருக்கிறது. எழுத்துகள் எப்போதும் தொலைநோக்கோடு எழுதப்பட வேண்டும். அப்போதுதான் அவை காலத்துக்கும் நீடித்து நிற்கும். அன்றைக்கு இந்த நூல் எதார்த்தத்தை மீறிய புனைவாக இருப்பினும் இன்றைக்கு அதுதான் எதார்த்தமாக உள்ளது.

இன்று நல்ல நூல்களை தேர்ந்து வாசிக்கும் பழக்கம் நம்மிடம் அருகி வருவதை கண்கூடாக காண்கிறோம். தொலைக்காட்சிகளும், செல்போன்களும் வாசிப்பை அருகச் செய்தவைகளில் மிக முக்கியமானவை என்றால் மிகையில்லை.

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:14
தலைப்பு: ஃபாரென்ஹீட் 451
ஆசிரியர்: ரே பிராட்பரி(தமிழில்: வெ. ஸ்ரீராம்)
வெளியீடு: க்ரியா
மொத்தப் பக்கம்: 200
விலை: ₹180

3 comments:

  1. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையில் மகிழ்கிறேன். அன்பும் நன்றிகளும்...

      Delete
  2. மிகவும் நிறைவான நூலறிமுகம்.

    ReplyDelete