Monday, March 20, 2023

கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்


 

"அந்தரம்" கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் காட்சிப் படம்.

- சுகன்யா ஞானசூரி.


அம்மா என்கிற அதிகாரத்திடம் அழுது பால் குடித்தபடியால் வேடிக்கை பார்ப்பதற்கான சத்து இன்னும் இந்த உடம்பில் இருக்கிறது.


ஒரு சாமான்ய மனித வாழ்வின் அலைக்கழிப்பு என்பது அவனது/ளது சொந்த தேசத்தில் நடப்பதாக இருப்பின் ஏதோவொரு வகையில் தீர்வை எட்டிவிடும் அல்லது குறைந்தபட்சம் சமரசத்திற்குள்ளாவது கொண்டுவரப்படும். இவை இரண்டுக்குள்ளும் அடக்க முடியாத ஆற்றாமையின் வெளிப்பாடு சொந்த தேசத்தில் இல்லாமல் அந்நிய நிலமொன்றில் அந்தரித்து நிற்கும் தமிழ் அகதிகளின் வாழ்வே அந்தரம். 


என்னால் உரைநடையில் சொல்ல முடியாமலே இருந்த என் அந்தரத்தை கவிதை எனும் வடிவம் கொண்டு வெளிக்கொண்டு வந்தேன். இது ஒரு வகையான அதிகாரத்தின் அடக்குமுறைக்கு கீழ்படியும் செயல் என்பதைக் காட்டிலும் தப்பித்தல் என்றே சொல்லவேண்டும். எது எப்படி இருந்தாலும் இவ்வளவு வெளிப்படையாக தயக்கமின்றி கால் நூற்றாண்டு தமிழர்களின் அகதி வாழ்வை ஒரு தன்வரலாற்றுப் புதினமாக்கி வழங்கியுள்ளார் தோழர் தொ. பத்திநாதன். 


இத்தனை ஆண்டுகால அகதி வாழ்வில் என்ன வகையான சொத்துக்களை சேர்க்க முடிந்தது? ஆடம்பரம் சுகபோக வாழ்க்கை? ஒருவேளை உணவைத்தானும் கடன்காரர் ஆக்கினை இன்றி உண்ண முடிந்ததா? படித்த படிப்பிற்கேற்ற வேலை? வேலைக்கேற்ற ஊதியம்? ஒருமுறையாவது அதிகாரிகளிடம் இழந்துபோகாத தன்மானம்? எந்த ஒன்றிற்கும் அகதியால் பதில் சொல்லிவிட முடியாதபடிக்கு இந்த வாழ்க்கை தொலைக்கப்பட்டு விட்டது என்பதை விடவும் தமிழ் அகதிகள் தமிழ் அதிகாரிகளின் சப்பாத்துக்களின் கீழ் நசுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதே முரண் நகையானது. 



பெண்மையை, பெண் சுதந்திரத்தைப் பேசாத எந்தவொரு படைப்பும் அத்துணை கலைத்தன்மை கொண்டதாக அமைந்துவிடாது. சாந்தி எனும் மையப் பாத்திரத்தின் நகர்வினூடாக பல்வேறுபட்ட முகாம் பெண்களையும் முகாம்களை ஒட்டியுள்ள ஊர்ப் பெண்களையும் அவர்களின் பார்வையில் முகாம் எனும் திறந்தவெளிச் சிறைச்சாலையின் பன்முகப் பார்வைகளை அவதானமாக கையாண்டுள்ளார். கரணம் தப்பினால் மரணம் என்ற வார்த்தையைப் போலத்தான் இருபக்கமும் கூர்மையுள்ள கத்தியின் மீது நடப்பதைப் போன்ற பதற்றமே அந்தரத்தினை வாசித்து முடிக்கும்வரை. 


இருபக்க உறவுகளுக்குள்ளும் பார்வைக் கோணல்கள் இருக்கிறது. அது சமய சந்தர்ப்பம் பார்த்து வெளிப்பட்டும் இருக்கிறது. இப்போதும் வெளிப்பட்டவண்ணம் இருப்பதையும் மறுக்க முடியாது. ராஜீவ்காந்தி கொலைக்கு முன் ராஜீவ்காந்தி கொலைக்குப் பின் என தமிழகத்தில் ஈழ அகதிகள் வரையறுத்துப் பார்க்கப்படுவதும் கண்கூடு. இன்றைக்கு எவரும் இல்லை ஆனால் அவலங்களைச் சுமப்பது என்னவோ சாமான்ய அகதிகள்தான். நரம்பில்லாத நாவுக்குத்தான் எத்தனை தடித்த சொற்களை வீசி எறிகிறது எளிதில். அது மனதில் ஆறாது அந்தரித்து நிற்கிறது மனம் நொந்தபடி. 


சாதி சமயம் இரண்டும் மனிதர்களை எந்த எல்லைக்கும் அழைத்துச் செல்லும். அதுபோல் வஸ்துகளின் பழக்கவழக்கங்களும், கொலைக் குற்றங்களும்,  முகாம் தலைவர் எனும் போதையும் அதிகாரிகளிடம் சொந்த மக்களையே காட்டிக்கொடுக்கும் கேவலமான செயலையும் செய்யத் தயங்காது என்பதை கந்தசாமி, முருகானந்தம் மாந்தர்கள் வழி எடுத்தியம்பிள்ளார். அதேபோல் கல்வியின் பெயரால் தொண்டு நிறுவனங்களும், மத நிறுவனங்களும் செய்த செய்கின்ற மோசடிகளும் கொஞ்சநஞ்சமல்ல. அகதிகளின் பெயரால் அவர்கள் பரலோகத்தில் நித்தியமடைவார்களாக ஆமென். 


அந்தரம் புதினத்தில் கதைசொல்லியாக பத்திநாதனே பயணிக்கிறார். தான் பார்த்த காட்சிகளை, தான் வாழ்ந்த வாழ்வை அவர் சொல்லிச் செல்வதைப் போலவே அமைத்துள்ளார். இங்கே ஜிகினா வேலைகளுக்கு இடமின்றி உள்ளதை உள்ளபடியே சொல்லியிருப்பதால் சக அகதியாக அவருக்கு என் ராயல் சல்யூட். மற்றபடி பெயர் மாற்றங்களும், கட்டிட மாற்றங்களும் நிகழ்ந்துவிடுவதால் மட்டும் எதுவும் உடனடியாக மாறிவிடாது. அதிகார வர்க்கத்தின் புலனாய்வு முற்றாக நீக்கப்பட்டு சுதந்திரமான வாழ்க்கை வழங்கப்பட்டால் மட்டுமே அந்தரித்து நிற்கும் மனங்களில் ஆறுதல் ஏற்படும். 


அவர் மன்னாரில் நின்றுகொண்டு கடந்துவந்த இந்த வாழ்வை வேடிக்கை பார்க்கிறார். நான் உள்ளுக்குள் இருந்துகொண்டே வாசித்து நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன்.


"அந்தரம்" தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளின் கால் நூற்றாண்டு அகதி வாழ்வின் ஒரு காட்சிப் படம். 


ஆசிரியர்: தொ. பத்திநாதன் 

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

விலை: ₹250.

No comments:

Post a Comment