Sunday, April 6, 2025

சிறுபிராயத்து நினைவின் துளிர்ப்பு

 சிறுபிராயத்து நினைவின் துளிர்ப்பு

**************************************



ஈழத்தில் எனது சிறு பிராயத்தில் அதாவது ஏழு வயதாக இருக்கும் போது ஈழநாடு, ஈழநாதம், உதயன் மற்றும் வீரகேசரி போன்ற பத்திரிகைகளை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அபோதுதான் எனது அப்பாவின் அப்பா கதிரன் மாணிக்கம் அவர்கள் (அவர் ஒரு பெரியாரிஸ்ட்) இராமாயணம் புத்தகத்தை அவருக்காக வாசிக்க வேண்டியிருந்தார். ஏனெனில் அப்போது அவர் வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாமலும், பார்வைக் குறைபாடுடனும் இருந்தார். அப்பப்பாவுக்காக வாசிக்கப் பழகிய பிறகுதான் எனக்கு நிறைய காமிக்ஸ் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள் வாங்கி வாசிக்கும் ஆவல் எழுந்தது. அச்சுவேலியில் இயங்கி வந்த வாடகை நூலகம் ஒன்றில் (சரியாக நினைவில் இல்லை யார் நடாத்தியது என்று) ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என வீட்டில் வாங்கிச் சென்று புத்தகங்களை வாங்கி வருவதும், வாசித்து முடித்ததும் திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு நூல்கள் வாங்கி வருவதும் என வாசிப்பு எனக்கு உணவை விடவும் மேலானதாக இருந்தது. வாசிப்புதான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. 


ஏன் இங்கே இதனைச் சொல்கிறேன் என்றால் இன்று (06.04.2025) காலையில் கமநிதாவின் “கசங்கிய மரம்” தொகுப்பினை வாசித்து முடித்ததும் எனது பால்ய காலங்கள் நினைவுக்கு வந்துவிட்டன. 


மார்ச் மாதம் இறுதியில் (30.03.2025) திருச்சி மாநகரில் தீ இனிது இலக்கிய இயக்கம் ஒருங்கிணைத்த நான்கு புத்தகங்களுக்கான அறிமுக நிகழ்வில் கும்பகோணம் நகரில் இருந்து வருகை தந்து சிறப்பித்த சொல்வெளி அமைப்பின் தோழர் பாரதி மோகன் அவர்கள் ஐந்தாம் வகுப்புப் படிக்கும் எனது மகளின் கரங்களில் தந்து சென்றார். 


நான் ஒன்பதாவது படிக்கையில் வெண்ணிலா பற்றிய கவிதையே எழுதினேன். கமநிதாவும் வெண்ணிலவு பற்றிய கவிதையிலேயே துவங்கியுள்ளார். இது இன்னும் கூடுதல் ஈர்ப்பினை எனக்குள் ஏற்படுத்தியது. ஆறாம் வகுப்பில். எவ்வளவு திறமை, எவ்வளவு அவதானிப்பு, எவ்வளவு புத்திக் கூர்மை. ஒவ்வொரு கவிதையிலும் தனித்துவம் மிளிர்கிறது.



தந்தை ஒரு கவிஞர் என்பதால் இது சாத்தியமாகியது என்றெல்லாம் சொல்லிக் கடந்துவிட முடியாது. அதுவொரு தவறான புரிதலை உருவாக்கும். குழந்தையின் இந்த ஆர்வத்தினை நாமே முளையில் கிள்ளி எறிவதற்கு இணையானது. 


நாற்பது கவிதைகள் கொண்ட இத்தொகுப்பில் அழகழகாய் படங்களையும் தேர்வு செய்துள்ளார். முதல் கவிதையிலேயே பெரிய வினாவுடன்தான் நம்மை உள்ளேகச் செய்கிறார். அதேபோல் குழந்தைமைக்கே உரித்தான குறும்புத்தனம் கொண்ட கவிதையையும் தந்துள்ளார் பக்கம் 39, 53 கவிதைகள் இதற்கு சாட்சி. காகிதப் பூவினைக் கொண்டு தேனியை ஏமாற்றுவதாக நினைத்தாலும் தேனீ அமராமல் பறந்து விடுவதனை பார்த்து அழவோ, கோவமோ கொள்ளாமல் குதூகலிக்கிறார். இது கண்ணாமூச்சி விளையாட்டு போன்று அமைகிறது. 


பக்கம் 43, 59, 67, 71 கவிதைகள் நல்ல எள்ளல் தொனியில் அமைந்துள்ள கவிதைகள். எள்ளல் தொனி இயல்பாக கவிதையில் அமரும்போது நம்மை சிந்திக்கச் செய்கிறது. இந்தக் கவிதையை வாசித்துப் பாருங்கள்...


கடற்கரையில் 

சுடச்சுட சுண்டல் கட்டித்தந்த 

செய்தித்தாளில் 

ஆறிப்போன செய்திகள்” சமூக ஊடகங்கள் இப்படித்தான் ஆறிப்போன செய்திகளை பரபரப்பாக்கி தந்து கொண்டிருக்கின்றன. 


பக்: 23, 29 கவிதைகள் சமூகத்தின் மீதும், சுற்றுச் சூழல் மீதும் கவிஞருக்கு உள்ள அவதானிப்பைச் சுட்டுகின்றன. 33 ஆம் பக்கத்தில் உள்ள கவிதை காகிதத்துக்கும் தூரிகைக்கும் இடையிலான போரில் அழகிய ஓவியம் பிறந்துள்ளதாக பிரகடனம் செய்கிறார். 


வால் முளைத்த பட்டம் 

காற்றின் 

திசைவழிப் பறவை” 


இந்தக் கவிதை நல்ல கவித்துவத்திற்கான சிறந்த உதாரணம். மேலும் 

காகிதத்தில் செய்த 

ரோஜாவில் வீசியது 

பச்சை வாசம்” என்ற கவிதை என் மனமெங்கும் கமநிதாவின் கவித்துவ வாசத்தை நிறைத்திருக்கிறது. பெரியவர்களை விடவும் குழந்தைகளிடம் படைப்பின் கூர்மை தனித்துவமாக மிளிர்கிறது. 


வெற்றுக் காகிதமாய் 

குழந்தைகள் 

கிழித்து அவரவர்களுக்கான 

பொம்மைகளை செய்துகொள்கிறார்கள் 

பெற்றோர்கள்” என கமநிதா பெற்றோர்களைச் சாடுகிறார். உண்மைதான் குழந்தைகளை குழந்தைகளாக பெற்றோர்கள் வளர விடுவதேயில்லை. கமநிதா போன்ற குழந்தைகளே இன்றைக்கு சமூகத்துக்கு அவசியம் வேண்டும். 


இதுபோல் இன்னும் சிறந்த கவிதைகளைப் படைக்க, வாழ்வில் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன் அன்பு மகளே.


வாழ்த்துகளுடன் 

சுகன்யா ஞானசூரி.

06.04.2025.        


நூல்: கசங்கிய மரம் 

ஆசிரியர்: கமநிநிதா 

பதிப்பகம்: பரிதி பதிப்பகம் 

விலை: ரூ 120 

வெளியீடு: டிசம்பர் 2024.

தொடர்புக்கு: 72006 93200