ஆங்கரை பைரவியின் என்னிடம் கொஞ்சம் காஞ்சுருட்டான் இருக்கிறது தொகுப்பின் மீதான வாசிப்பினை முன்வைத்து. - சுகன்யா ஞானசூரி
"நதிக்கரை நாகரிகங்களில்
சிறந்த இனவழி வந்தவர்களில்
கடல்வழி கடந்தபோது
அகதி என்றழைக்கப்பட்டவர்களில்
நானும் ஒருவன்"
என்ற எனது நாடிலி கவிதையிலிருந்து தொடங்குவதே இக்கவிதைத் தொகுப்புக்கு நான் செய்யும் மரியாதை ஆகும். ஏனெனில் கடலோடு வாழ்ந்த எங்களுக்கு நதியின் சலசலப்பை செவிமடுப்பதில் ஒரு அலாதி இன்பம். வாழ்வெனும் நாணயத்தின் இரு பக்கங்களைப்போல் எப்போதும் ஓயாமல் இரைந்து கொண்டிருக்கும் நதியும் கடலும் ஏதோவொன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் இந்தத் தொகுப்பினுள் என் கைபிடித்து அழைத்து வந்தது ஒரு கவிதை.
"நதிக்கரைகளில் நடந்த எங்களின் வாழ்க்கை
இருண்டு கிடக்கிறது...
நடக்க முடியாத நதிக்கரைகள்"(பக்: 44)
அவைகள் முடமாகிப் போனதிற்கு நம் ஆலை முதலாளிகளின் நாணயமற்ற இச்செயலை நாசுக்காக பதிவிடுகிறார் இப்படியாக
"அரசு வரைபடம் சொல்கிறது
நதி
ஆலைக் கழிவுகளின்
சாக்கடையென." பக்: 43)
ஆங்கரை: திருச்சி - இலால்குடி சாலையில் அமைந்துள்ள அழகிய கிராமம். காவிரியின் கிளை நதியான கொள்ளிடத்தின் கரையில் அமைந்துள்ள கிராமம். வாழை சாகுபடி எப்போதும் இருக்கும். முதன்முதலாய் வாழை திரைப்படம் பார்த்ததும் விகடன் தடம் நேர்காணலில் இரண்டு வாழைத் நார்களை சும்மாட்டில் சுமந்து நின்ற தோழர் பைரவியே எனக்கு நினைவிற்கு வந்தார். சிவனைந்தன் எனக்கு பைரவியாகவே தெரிந்தார். தன் உழைப்பில் உண்மையாக இருக்க வேண்டும் என்ற உறுதிமிக்க நல்ல மனிதர். சொம்படித்திருந்தால் திருச்சியின் முக்கிய பெரும்புள்ளியாக இந்நேரம் வலம் வந்திருக்க வேண்டியவர். ஆனால் அதை அவர் புறங்கையால் தள்ளிவிட்டு இதுதான் நான், இதுதான் என் வழி என அமைதியாக வாழ்ந்து வரும் அகிம்சாவாதி. கோபம் வருகையில் சொற்கள் சாட்டைகளாக வீசிக்கொ(ல்)ள்ளும்.
இனிக் கவிதைகளுக்குள் செல்வோம்....
"இப்போது
களத்தில் இருக்கிறேன்
போட்டிக்கு வருகிறவர்கள்
வரலாம் (பக்: 9)
இனி ஒருபோதும் திரும்பி வரமாட்டார், உடைந்து போய் ஓரமாக மூலையில் குந்திவிட்டார் என்ற எதிரிகளின் ஏளனப் பேச்சுக்களுக்கு அறைகூவல் விடுக்கும் முகமாக இருக்கிறது.
"உண்மையை மட்டுமே
உள்வாங்கும்
ஒலிவாங்கி என்றிருந்தால்
கழிப்பறையில் மட்டும்தான்
ஒலித்துக் கொண்டிருக்கும்
உன் குரல்" (பக்: 38)
என அரசியல்வாதியின் கபடப் பேச்சுக்களை எள்ளி நகையாடுகிறார். அரசியல்வாதிகளுக்கு உள்ள பல முகங்களுக்கு இத்தொகுப்பில் நிறையக் கவிதைகள் இருக்கின்றன. அதேபோல் இலக்கியவாதியின் கையூட்டு பற்றிய எள்ளலாக "ஒன்லி கூகுள் பேதான்' என்ற கவிதையைக் குறிப்பிடலாம். போகிற போக்கில் இசைஞானிக்கும் ஒரு கொட்டு வைத்து விடுகிறார் இப்படியாக
"ஆர்மோனியம் தந்த
அத்தனை இசைகளையும்
ஒரு ஜால்ரா
விழுங்கிக் கொண்டது' (பக்: 38)
இரும்புப் பெண்மணிக்கும் இரண்டு கவிதைகளை இத்தொகுப்பில் மானசீகமாக பதிவு செய்துள்ளார்.
"அவன் மந்திரச் சொற்களில் மயங்கி
தம்பிகளும் படகில் ஏறிக் கொள்கிறார்கள்...
...
கடலில் தத்தளிக்கும்
என் பெயரைக் கேட்டீர்கள்
சொல்ல மறந்து விட்டேன்
என் பெயர் விஜயலட்சுமி" (பக்: 99)
என்ற கவிதை யாருக்கானது என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.
ரெங்கசாமியும், ராமசாமியும் :
ராமசாமி விழிப்பில் இருப்பதால்தான் ரெங்கசாமி ஆனந்த சயனத்தில் பாதுகாப்புடன் உறங்குகிறார் இல்லையா. அப்படியான மதநல்லிணக்கம் கொண்ட காவிரிக்கரை இது. சொர்க்கவாசல் திறப்பு குறித்த தந்தை தனையன் உரையாடல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. "யோவ் ராமசாமி" ஒரு புதிய திறப்பினை கூறும் கவிதை.
"பிட்டுக்கு
மண் சுமக்க வந்தாய்
பிள்ளைக்கறி
கேட்டு வந்தாய்
பீ அள்ள வரமாட்டாயா"? (பக்: 54)
"மலக்குழியில் விழுந்த
என் தாத்தன்
கதறியபோது மட்டும்
எந்த வீட்டில் வெண்ணையை
நக்கிக் கொண்டிருந்தாய்? (பக்: 48)
என மாமன் மச்சான் கடவுள்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு எப்போதும் அமைதியே பதிலாக இருக்கிறது. மலக்குழி மரணங்களுக்கு நிவாரணத்தைத் தவிர அரசாங்கத்திடமே தீர்வு எட்டாமல் தொடர்கிறது இன்றைய அறிவியல் வளர்ச்சி பெற்ற நவீன காலத்திலும். ஏனென்று கேட்க நாதியற்ற விளிம்பு நிலைச் சமூகம்தானே பலியாடுகளாகின்றனர்.
மதவாதிகளுக்கு, இனவாதிகளுக்கு, துரோகிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, உறவுமுறை பாராட்டி ஏமாற்றுவோருக்கு என நிறையவே காஞ்சுருட்டான்களை கவிதைகளுக்குள் கண்ணிவெடியாய் வைத்திருக்கிறார். அக்கம் பக்கம் (பக்: 95) கவிதையில் ரொமான்ஸ் இருக்கிறது. இயற்கை மீதான கனிவும், அக்கறையும் நிறைந்து இருக்கிறது.
"மிஸ் யூ" (பக்: 85) கவிதை காதல் கோட்டை காலத்துக்கு முன்பானதாக இருப்பினும் இப்போதைய காலத்தில் இது இளைய தலைமுறைகளின் போக்கினை கூர்ந்து அவதானிக்க வேண்டிய அவசியத்தை, மகளின் நாசுக்கான உரையாடல் வழி கவிதை ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. "ஒன்லி கூகுள் பேதான்'" கவிதை சமகாலத்துக்கான டிஜிட்டல் சமூகத்தின் போக்கினை படம்பிடிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நகைச்சுவை உணர்வு அதிகமாக இக்கவிதைகளில் நிறைந்து இருக்கிறது.
இத்தொகுப்பில் "ஒவ்வாமை" (பக்: 13) கவிதை மட்டும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளால் புனைவுத்தனமாக துருத்திக் கொண்டிருக்கிறது. ஒருவேளை இதில் இந்தி என்பதற்குப் பதிலீடாக சாதி என்பதை வைத்து யாத்திருந்தால் ஒரு அருமையான கவிதைக்கான படிமமாக அமைந்திருக்கும் என்பது எனது வாசிப்பின் புரிதல். சில எழுத்துப் பிழைகள் அல்லது தட்டச்சுப் பிழைகளாகக் கூட இருக்கலாம். இவற்றை கொஞ்சம் ஊன்றிக் கவனித்திருக்கலாம். மேலும் கவிதைகளின் வடிவமைப்பில் கூடுதல் கவனமும் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் அடுத்த பதிப்பில் சரி செய்வீர்கள் என நம்புகிறேன்.
இறுதியாக:
பிச்சை எடுப்பேன்
உங்களிடம் அல்ல
உங்கள் முன்பும் அல்ல
பிறழ்வு நிலையில்
கதறி அழுவேன்
உங்களிடம் அல்ல
உங்கள் முன்பும் அல்ல
ஆனால் ...
வாழ்ந்து காட்டுவேன்
உங்களிடமும் உங்கள் முன்பும். (பக்:100)
ஒரு படைப்பாளனுக்குரிய அத்தனை சுயமரியாதையும், கர்வமும் இக்கவிதைக்குள் அடங்கியுள்ளன. இதுதான் பைரவி. பைரவிதான் இக்கவிதை. படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் காஞ்சுருட்டானின் (செந்தட்டி, காஞ்சுண்டி) நமைச்சல் ஏதோவொரு இடத்தில் இருந்தே தீரும். அப்படி இல்லை என்பவர்கள் முதல் கல்லை எறியும் பாக்கியசாலி ஆவீர்கள்.
நூல்: என்னிடம் கொஞ்சம் காஞ்சுருட்டான் இருக்கிறது
ஆசிரியர்: ஆங்கரை பைரவி
பதிப்பகம்: செவ்வி வெளியீடு
விலை: ₹ 150
தொடர்புக்கு: 9976350636