Sunday, March 4, 2018

சிவந்த மண்-சுகன்யா ஞானசூரி

  (அனைவருக்கும் வணக்கம்... நான் சிறுகதை ஒன்றை எழுத முயற்சி செய்துள்ளேன். கீழே அந்த கதை பதிவு செய்துள்ளேன். வாசித்துவிட்டு சொல்லுங்கள்.)

சிவந்த மண்

பசுமை போர்த்திய அந்தப் பெருங் காடுகள் ஒருபோதும் எண்ணிப் பார்த்திருக்காது தங்களது இந்த நிலையை. பறவைகள், விலங்குகள், பூச்சிகள் மனிதர்கள் என கொஞ்சம் மாற்றமான உலகுதான். எம் காட்டில் உள்ள மரங்களில் பாதிகூட உலகத்தின் காடுகளில் இல்லையென செருக்குற்று இருந்திருக்கக்  கூடும் அந்தக்  காடுகள்.

       இராணுவத்தின் டாங்குகளின் அதிர்வுகளில், பீரங்கிகளின் முழக்கத்தில் மொத்தக் காடும் கலங்கித்தான் போய்விட்டது. பறக்க எத்தனித்த பறவைகளின் சிறகுகள்கூட எரிந்து போனது. உலக வல்லாதிக்கப் படைகள் எல்லாம் ஓரிடத்தில் கூடினால் சின்னத்  தேசம் என்ன செய்யும்? வெடிச் சத்தத்தில் மொத்தக் காடும் அழுகுரல்களின் கூடாரமகியது.

        உச்சகட்ட தாகுதல்களுக்கிடையே ஒரு குரல் காற்றில் கரைந்து கொண்டிருகிறது. அடியோடு பெயர்ந்து விழும் அந்த மரங்களுக்கிடையே..... பாஸ்பரஸ் குண்டுகளின் அமில மழைகளுகிடையே..... அந்தக் குரல் விட்டு விட்டு ஒலிக்கிறது......

        வெடித்து சிதறிய சன்னங்கள் மனித உடல்களை மட்டுமல்ல காட்டு விலங்குகளையும் இரத்ததில் குளியாட்டுகிறது...... அமிலத் தீயில் மரங்களோடு பல உடலங்களும் எரிந்து பொசுங்கிக் கொண்டிருக்கிறது.......
   
         உடல் கருகும் வாடைகள் காற்றில் கலந்து குடலைப் புரட்டுகிறது....... மனதில் ஒருவித வெறி தொற்றத்தான் செய்கிறது...... வானூர்திகளின் பேரிரைச்சல் களுக்கிடையே பானு....பானு....என ஒரு ஆண் குரல் காற்றில் கலந்து கேட்கிறது. மொத்த சக்திகளையும் இழந்து இறுதித் தவிப்புகளில் தேடுவதாகவே தெரிகிறது.
   
         இரத்தமும் சேறுமாய் இருக்கும் உடலங்களை அவன் திருப்பித் திருப்பிப் பார்க்கிறான். பானுவுக்கு ஒன்றும் ஆகியிராது என்று அவன் உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாலும் மனம் பதற்றத்தோடு தேடுகிறது. அவனது சிறுவயது எண்ணங்களும் பின்னோக்கி ஓடுகிறது.

           தீரன் சீக்கிரம் வா.... பொம்பர்க்காரன் (ஒரு வகையான போர் விமானம்) வட்டமடிக்குறதைப் பார்த்தால் ஏதோ அசுமாத்தம் நடக்கப் போவுதெண்டு நினைக்குறேன் தீரா..... வீட்டுக்கு சீக்கிரம் போய்விடுவோம் வா பானு......  என இருவரும் மரங்களின் மறைவுகளினுடே வானத்தைப் பார்த்தவாறு மறைந்து மறைந்து நடக்கின்றனர்.

            அன்றுதான் அந்த துயர சம்பவம் நடந்தது. பள்ளி முடித்து வீட்டுக்கு கிளம்பியபோது வட்டமடித்த அந்த விமானம் பீப்பாய் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றது. வெடித்த அந்தக் குண்டுகளில் சுக்கு நூறாய்ப் போனது பானுவின் வீடு மட்டுமல்ல அவளது பெற்றோரும்தான்.

             அனாதையாக நின்றவளை என்னால் என் வீட்டுக்கு கூட்டிச் செல்ல முடியவில்லை. வீட்டில் யாரெண்டு கேட்டால் நண்பி எண்டு சொன்னாலும் நம்பமாட்டார்கள். காதலி எண்டு சொல்லவும் முடியாது. சொல்லிவிடும் துணிவும் எனக்கில்லை. சொல்லுகின்ற வயதுமில்லை அது. செஞ்சோலை இல்லம் அவளை அழைத்துச் சென்றது. காதல் மட்டும் கண்களில் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

             இங்கு காதல் அப்படித்தான். துரித உணவுகளைப் போல செரிக்காத காதல்கள் இங்கில்லை. ஆரோக்கிய உணவுகளைப் போன்றவர்கள். ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அன்புகளை மட்டுமே பரிமாறிக் கொள்வார்கள்.

              சில ஆண்டுகளுக்குப் பிறகு நாங்களும் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர நேர்ந்தது. வன்னியில் சித்தி குடியிருந்ததால் நாங்களும் அங்கு குடியேறினோம்.

               முதன்முதலாக வன்னிக் காட்டை பார்த்தபோது பிரமித்துப் போய்விட்டேன். அவ்வளவு பசுமையும், நெடுமரங்களும் என அழகாய் காட்சி தந்தது.

                 இந்தக் காடுகள் எம்மைப் போல் இடம் பெயர்ந்துவிடக் கூடாது. அப்படி ஒருவேளை நிகழ்ந்து விட்டால் எமது பண்பாட்டுக் கூறுகளை, எம் இனத்தின் அடையாளங்களை நாம் இழந்து விடக்கூடும்.

                   வன்னிக்கு வந்தபோதுதான் பானுவையும் பார்க்க நேரிட்டது. பானுவை மீண்டும் அங்கு கண்டபோது வார்த்தைகள் எழவே இல்லை. அவளைக் கட்டியணைத்து அழுதுவிட வேண்டுமென மனம் துடித்தது. இத்தனை ஆண்டுகளில் பானு நிறையவே மாறிவிட்டாள். என்னைமட்டும் மறக்கவில்லை.

                    பானுவைக் கண்டத்தில் நான் என்னையே முழுவதுமாய் இழந்து விட்டதாக எனக்குள் தோன்றியது. இருக்காதா பின்ன..... எத்தனை நாட்களாகிவிட்டது அவளைப் பார்த்து பேசி.

                   இப்படியாக ஒருசில ஆண்டுகள் நான் பானுவை பார்ப்பதும் கதைப்பதும் தொடர்ந்தது.

                    அன்றைய தினம் அப்படி நான் பானுவை பார்க்க சென்றபோதுதான் அந்த இறுதிக் கணங்களுக்குள் நானும் அகப்பட்டுக் கொண்டேன்.

                     எரிந்து கருகும் உடலங்களின் வாடையும், அமிலக் குண்டுகளின் நெடியும் நிலைகுலையச் செய்துவிட்டது. இன்னொரு கிரோஷிமா, நாகசாகியின் கதிர்வீச்சுக்கள் எம் மண்ணிலும் தங்கியிருக்கக் கூடும். இங்கே செத்துப் பிழைக்கும் உயிர்களில் நிச்சயம் அது கடத்தப்படக்கூடும்.

                      இறந்து கிடக்கும் உடலங்களை வல்லாதிக்க அரக்கர்கள் வன்புணர்வு கொள்வதைக் கண்டு மனம் நொந்தது. ஐயோ... பானு  நீ உயிரோடு இந்த அரக்கர்கள் கையில் அகப்படக்கூடாது.... மனம் துடியாத் துடித்தது.

                       இந்த வல்லூறுகளுக்கு எதிராக நாம் சண்டையிடுவது தவறா? எமக்கென்று ஒரு வாழ்க்கை....அதில் கொஞ்சம் சந்தோசம் எதிர்பார்ப்பது தவறா? ஆதிமுதல் ஆண்ட இனம் தனக்கென தனித் தேசம் கேட்பது தவறா? இத்தனை இலட்சம் உயிர்களை கொல்லும் போர் வேண்டுமா? அன்பைப் போதிக்கச் சொன்ன புத்தனின் குழந்தைகள் ஏன் எம் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட வேண்டும்?

                        அவனுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. இங்கு கத்துகிற கதறல் சத்தங்கள் கூட கடல் தாண்டிக் கேட்குமென நம்பமுடியாது. இதோ இங்கிருக்கும் கஜவர்களின் கூட்டத்தில் பல நாட்டுக் கறுப்பாடுகளும் சேர்ந்ததல்லவா ஒரு இனத்தை வேட்டையாடுகிறது.

                        எம் இனம் கட்டியெழுப்பிய கண்ணியமான, கட்டுக்கோப்பான வளர்ச்சி பொறுக்காது ஏற்படுத்தப்பட்ட போராகவே எமக்குத் தெரிகிறது. தமது இயலாமைகளை எமது பெண்கள் மீது வன்புணர்வின் ஊடாக தீர்த்துக் கொண்டல்லவா இருக்கிறார்கள்.

                        உண்மையான போர்வீரன் ஒருபோதும் இந்த இழிசெயலை செய்ய கனவிலும் நினைக்கமாட்டானே.

                        பானு.... பானு.....நீ எங்குதான் இருக்கிறாய்? நீ பாதுகாப்பு வலயத்துக்குள் சென்றிருந்தால்கூட சந்தோசம்தான் பானு. பாதுகாப்பு வலையத்துக்குள் பானு சென்றிருக்கக் கூடுமென நினைத்து திரும்புகையில் தீரா.......... அடி ஈனசுரத்திலிருந்து ஒரு பெண் குரல். தீரா ....... தீரா ........ அது பானுவின் குரலாகவே தெரிகிறது. அதோ....... அதோ........ அவள்தான்...... பானு...... நான் தேடிக்கொண்டிருந்த பானு....... கண்கள் பனிக்க அவளை ஆரத் தழுவ ஓடுகிறேன்...... சப்பாத்துக் கால்களோடு சில ஓநாய்கள் அவளை மிதித்துக் கொண்டிருக்கிறது.

                         ஐயோ...... பானு....... உன்னையும் இந்த வல்லூறுகள் விட்டு வைக்கவில்லையா? பானு..... பானு..... கதறிக்கொண்டு அவளருகில் செல்வதற்குள் துப்பாக்கிகள் வெடித்தது. உடலெங்கும் இரத்தம் பீறிட்டெழ மிச்சம் மீதியாய் இருந்த அந்த வெண்மணல் பரப்பும் சிவந்தது.

4 comments:

  1. மனதைத் தொட்ட பகிர்வு. எத்தனை எத்தனை இழப்புகள் இந்த போர்களில்....

    நல்ல முயற்சி. தொடரட்டும்.

    ReplyDelete
  2. கதையின், கருத்தும் எழுத்தும் ரொம்பவே அழகு..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு அன்பும் நன்றிகளும்...

      Delete