Tuesday, March 27, 2018

அபாய நகரம்-ராணி காமிக்ஸ்


1990 களில் யாழ் அச்சுவேலி மஹாவித்தியாலையம் பள்ளிக்கு எதிரே உள்ள ஒரு புத்தகக் கடையில் (கடையின் பெயர் நினைவில் இல்லை) சொல்லி வைத்து மாதம் தவறாது வாங்கி வந்து பாட நூல்களுக்கு முன்னமே வாசித்து முடித்துவிடுவேன். அம்புலி மாமா, ராணி காமிக்ஸ் போன்றவைகள் என் வாசிப்பை வளப்படுத்தியவை என்பேன். ஏனெனில் எனது ஏழாவது வயதில் எனது அப்பப்பாவிற்கு (அப்பாவின் தந்தை) மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றை தினமும் மாலையில் அவர் வீட்டுக்கு சென்று வாசித்துக் காட்டுவேன். எனக்கு புத்தகங்களின் மீதான ஈர்ப்புக்கு அடிகோலியதும் அவரேதான். அவர் ஒரு தீவிர பெரியாரிஸ்ட் என்பது எனக்கு பின்னாளில்தான் வாசிப்புகளினூடாக தெரிய வந்தது.

இன்று காலையில் நண்பன் சரோகராஜ் இந்த காமிக்ஸ் புத்தகத்தின் லிங்(கொக்கி) அனுப்பி என் பழைய நினைவுகளை கிளர்த்திவிட்டார். படுக்கையை விட்டு எழும்பி பல் துலக்குவதற்கிடையில் இந்த காமிக்ஸை ஒரு சிறுவனைப் போல் வாசித்து முடித்தேன். மீண்டும் ஒரு சிறுவனாக என்னை உணர்ந்தேன் இன்று.

1996 களில் ஏதிலிகளாக அறந்தாங்கி அழியாநிலை முகாமில் இருந்தபோது முகாம் நூலகத்தில் நண்பன் சரோகராஜுடன் போட்டி போட்டு வாசித்தும், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி முகாமில் இருந்தபோது ஒரு கடையில் நிறைய காமிக்ஸ் வாங்கியதும் இன்றும் பசுமையாக இருக்கிறது நினைவடுக்குகளில்.

அபாய நகரம் கதை என்னவென்றால் முகமூடி வீரர் மாயாவி ரெக்ஸ் எனும் பன்னிரண்டு வயது சிறுவனை பாரோகான் நாட்டின் இளவரசனாக ஆக்கி, சதிகாரன் பகத்தூரை சிறையிட்டு, அரசரை விடுதலை செய்து, அந்நாட்டின் அடிமைகளை விடுதலை செய்வது. அதற்கிடையில் நிகழும் அவரது சாகசங்களை நீங்கள் வாசித்தால்தான் உணர முடியும். வாசித்து உணர்ந்து கொள்ளுங்கள்.

முகமூடி வீரர் மாயாவி, இரும்புகை வீரர் மாயாவி, கரும்புலி மில்லர், விக்ரமாதித்தனின் வேதாளம் போன்ற காமிக்ஸ்கள் என்றும் காலத்தால் அழிக்கமுடியாதவைகள்.

மூன்று ரூபாய் புத்தகத்தை பதினைந்து ரூபாய்க்கு அச்சுவேலியில் அன்றைக்கு வாங்கும்போது ஏன் இவ்வளவு அதிகம் வச்சு விற்கிறீர்கள் என்ற கேள்விக்கான விடையை  பின்னாளில் வாசிப்புகளே கொடுத்தது. வாசிப்போம்! வாசிப்பை நேசிப்போம்!!

அடையாள எண்: NV104
#வாசிப்பை_நேசிப்போம்
#100_நாள்
நூல்:15
தலைப்பு: அபாய நகரம்-காமிக்ஸ்
வெளியீடு: ராணி
மொத்தப் பக்கம்: 60

4 comments:

  1. மாயாவி - நாங்கள் சிறுவர்களாக இருந்த போது “இரும்புக் கை மாயாவி”யின் கதைகள் நிறைய படித்திருக்கிறோம். அது நினைவுக்கு வந்தது.

    தொடரட்டும் வாசிப்பனுபவம்....

    ReplyDelete
  2. நாம் எல்லோருமே காமிக்ஸ் படித்து வளர்ந்து வந்தோம். தங்கள் அனுபவம் என் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது உண்மை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா... நினைவுகள் எப்போதும் பசுமையானவை...

      Delete